’பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருக்கும் கும்பலை பொதுவெளியில் நடமாடவிடுவது பேராபத்து’ என தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி பகிர்ந்துள்ளார் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ்குமார்.

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆயிரக்கணக்கான வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பயங்கர சம்பவத்தில் பல அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும் செய்திகள் நடமாடுகின்றன.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ், ட்விட்டரில் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.