தீபாவளிக்கு மூன்று வாரங்கள் முன்னதாக அக்டோபர் 4ம் தேதியன்று ரிலீஸாகவிருக்கும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியின் ‘அசுரன்’ தமிழ் சினிமா அடுத்து எதிர்பார்க்கும் முக்கியமான படங்களுள் ஒன்று. சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவலாசிரியர் பூமணியின் ‘வெக்கை’நாவல்தான் அசுரனாக வளர்ந்துகொண்டிருக்கிறது என்பது தெரிந்த சங்கதிதான் என்றாலும் அதன் கதை என்ன என்பது இதுவரை சரியாண கோணத்தில் வெளிவரவில்லை.

’அசுரன்’கதையைச் சுருக்கமாக தெரிந்துகொள்ள விரும்பும் தனுஷ் ரசிகர்களுக்காக எழுத்தாளர் சுஜா செல்லப்பனின் முகநூல் பதிவு இதோ,...தோற்கடிக்கப்பட்ட அல்லது துரோகமிழைக்கப்பட்ட மனிதனாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் வாய்ப்பை வாழ்க்கை ஒரு முறையேனும் நமக்கு வழங்கிவிடுகிறது. அவ்வுணர்வை உள்ளெழச் செய்வதற்குப் பின்னான சமூகக் காரணிகளையும், எதிர்வினைத் தூண்டுதலுக்கான நியாயப்படுத்தலின் உருவாக்கத்தையும் அடிநாதமாகக் கொண்டுள்ளது இந்நாவல். 

குடும்பத்தில் உள்ள அனைவரின் மனத்திலும் சதா நிரம்பிக் கொதிக்கும் வன்மமும் பழிவாங்கும் உணர்வும் உந்தித் தள்ள, தன் அண்ணனைக் கொன்ற வடக்கூரானைக் கொலை செய்துவிடும் பதினைந்து வயது சிதம்பரம், தன் தந்தையுடன் தலைமறைவாக வாழும் அந்த எட்டு நாட்கள்! ஊருக்குள் இருந்தவரை மனத்தில் நிறைந்திருக்கும் கசப்பு, ஆங்காரம், ஏமாற்றம் பழி,வெற்றி, தோல்வி போன்ற சமூகக் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டவை அனைத்தும் கரிசல் காட்டுக்குள் நுழைந்ததும் அழிந்துபோய், உயிர் வாழ்தலுக்கான அடிப்படைப் பிரச்சனைகளான பசியும் எதிரிகளிடமிருந்து உயிர் தப்புதலும் மட்டுமே அன்றாடங்களை நிரப்பி ஆதிமனிதனாக்கிவிடும் நிலையை அப்பட்டமாகச் சொல்லும் கதை. 

அரசியல், அறம், நிலவுடைமை, வர்க்கபேதம் போன்ற கனமான வார்த்தைகள் கொடுக்க முடியாத அழுத்தங்களை, அர்த்தங்களை இலகுவாகத் தந்துவிடும் எளிய உரையாடல்கள், நிலக்காட்சிகளின் நுட்பமான விவரிப்புகள், நாவலில் எழுத்தாளரின் இருப்பைக் கொஞ்சமும் காட்டாமல் கதாபாத்திரங்களைத் தன்னியல்பில் உலவவிட்டிருக்கும் சுதந்திரம் என வெக்கையில் கவர்ந்தவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். ’அசுரனை’ நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள தனுஷ் கெட் அப்களைப் பார்த்தால் கொலை செய்யப்பட்ட அண்ணன், பழி வாங்கும் தம்பி சிதம்பரம், தந்தை ஆகிய மூன்று பாத்திரங்களையும் தனுஷே ஏற்றிருக்கிறார் என்று தெரிகிறது.