தனது நடிப்பிற்காக தேசிய விருதையும் வென்ற விஜய் சேதுபதி திரைத்துறையில் நுழையும் முன்பு, சேல்ஸ் மேனாக  பணியாற்றினார்.

இந்தியாவில் பல நடிகர்கள் தங்கள் நடிப்பாலும் திறமையாலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈர்த்து உச்ச நடிகர்களாக மாறி உள்ளனர். இன்று பிரபலமான உச்ச நடிகர்களாக இருந்தாலும் பலர் திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு சிறிய வேலைகளை செய்துள்ளனர். ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஷாருக்கான் உள்ளிட்ட பல நடிகர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால் இந்த நடிகர்கள் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக உள்ளனர். அந்த வகையில் தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் ஒரு தமிழ் நடிகர் குறித்து தான் பார்க்கப் போகிறோம். 

அவர் வேறுயாருமில்லை விஜய் சேதுபதி தான். தனது நடிப்பிற்காக தேசிய விருதையும் வென்ற விஜய் சேதுபதி திரைத்துறையில் நுழையும் முன்பு, சேல்ஸ் மேனாக பணியாற்றினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என பல நடிகர்களுடன் பணியாற்றிய இவர் தற்போது ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்துள்ளார்.

1978ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி பிறந்த விஜய் சேதுபதி, ராஜபாளையத்தில் வளர்ந்தார். பள்ளியில் படிக்கும் போது மிகவும் சுமாராக படிக்கும் மாணவராகவே இருந்ததாக விஜய் சேதுபதி தெரிவித்து. 6-ம் வகுப்பு படிக்கும் போது சென்னைக்கு குடிபெயர்ந்த விஜய் சேதுபதி மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மேல்நிலைப் பள்ளியிலும் லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் படித்தார். பின்னர் துரைப்பாக்கத்தில் உள்ள தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரியில் (மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் இணை நிறுவனம்) பி,காம் பட்டம் பெற்றார்.

நிலவில் நிலம் வைத்திருக்கும் நடிகர்களின் லிஸ்ட்.. அதிலும் இந்த உச்ச நடிகரின் ரசிகை தான் வேற லெவல்!

தனது 16 வயதில் நம்மவர் (1994) படத்தில் நடிக்க ஆடிஷனில் கலந்துகொண்டார் விஜய் சேதுபதி. ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் அவர் நிராகரிக்கப்பட்டார். கல்லூரியில் படிக்கும் போதே, சில்லறை விற்பனைக் கடையில் சேல்ஸ் மேனாக இருந்தது முதல், ஃபாஸ்ட் ஃபுட் கூட்டுக் கடையில் காசாளர், ஃபோன் பூத் ஆபரேட்டர் வரை பல வேலைகளை பார்த்துள்ளார் விஜய் சேதுபதி. கல்லூரிப் படிப்பு முடிந்து, சிமென்ட் மொத்த விற்பனை கடையில் கணக்கு உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர், அவர் தனது மூன்று உடன்பிறப்புகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால், துபாய்க்கு கணக்காளர் வேலைக்கு சென்றார். அங்கு இந்தியாவில் கிடைத்ததை விட 4 மடங்கு அதிக சம்பளம் கிடைத்தது.

துபாயில் வேலை செய்த போது தான் விஜய் சேதுபதி,தனது வருங்கால மனைவி ஜெஸ்ஸியை ஆன்லைனில் சந்தித்தார். பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் 2003 இல் திருமணம் செய்து கொண்டனர். எனினும் துபாயில் தனது வேலையில் மகிழ்ச்சியடையாமல் இந்தியாவுக்குத் திரும்பிய விஜய் சேதுபதி மார்க்கெட்டிங் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக சேர்ந்த விஜய் சேதுபதி, அங்கு நடிகர்களை நடிப்பு திறனை தொடர்ந்து கவனித்து வந்தார். 

இதை தொட்ர்ந்து விஜய் சேதுபதி புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார். மேலும் பெண் உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்தார். கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றி விஜய் சேதுபதி, இறுதியாக 2010-ல் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது.

2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, அந்த ஆண்டு வெளியான மூன்று படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன. மேலும் விஜய் சேதுபதி இயல்பான நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. 2012-ல் கார்த்திக் சுப்புராஜ் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்கள் மூலம் விஜய் சேதுபதி பிரபலமானார். மேலும் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்த சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

பின்னர் 2013-ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. இந்த படமும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே ஆண்டு வெளியான இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படமும் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வரவேற்பை பெற்றது. பின்னர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, ஆரஞ்சு மிட்டாய் என அடுத்தடுத்த படங்களில் விஜய் சேதுபதி நடித்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் சேதுபதியின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இந்த படம் மாறியது. பின்னர் சில தோல்வி படங்களை கொடுத்தாலும், விக்ரம் வேதா படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்திருப்பார் விஜய் சேதுபதி. 

ரஜினிகாந்த் நடித்த பேட்ட, மாஸ்டர், கமல்ஹாசன் நடித்த விக்ரம் மற்றும் பல படங்களில் அவர் வில்லனாக நடித்தார். இப்போது, அட்லீயின் இயக்கத்தில் ஜவான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Jawan Review in Tamil : கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கினாரா அட்லீ? ஷாருக்கானின் ஜவான் பட விமர்சனம் இதோ

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது விஜய் சேதுபதிக்கு கிடைத்தது. இது தவிர பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். தற்போது திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் விஜய் சேதுபதி உள்ளார். ஜவான் படத்தில் நடிக்கர் விஜய் சேதுபதிக்கு 21 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு, 140 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் பல விலையுயர்ந்த ஆடம்பர கார்களை வைத்திருக்கிறார். ஜவான் தவிர, விஜய் சேதுபதி ஸ்ரீராம் ராகவன் இயக்கி வரும் மெர்ரி கிறிஸ்மஸ் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். கத்ரீனா கைஃப் ஹீரோயினாக நடிக்கும் இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.