காதலர் தினத்தை ஒட்டி நேற்று ரிலீஸான நான்கு படங்களுமே படு பரிதாப தோல்வியைச் சந்தித்துள்ளதாகவும் குறிப்பாக நடிகர் கார்த்தியின் ‘தேவ்’ படம் முதல் நாள் முதல் காட்சி கூட ஹவுஸ் ஃபுல் ஆகவில்லை என்று தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காதலர் தினத்தன்று சுமார் அரைடஜனுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில், இறுதியாக கார்திக்கின் ‘தேவ்’,விமெல் நடித்த ‘சித்திரம் பேசுதடி 2’,ஒரு கண் சிமிட்டலில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரியா வாரியரின் ‘ஒரு அடார் லவ்’ படம் பார்த்ததை யார் கிட்டயும் சொல்லிடவே வேணாம் என்கிற அளவுக்கு அதகளம் பண்ணியிருக்கும் ‘காதல் மட்டும் வேணா’ ஆகிய நான்கு படங்கள் ரிலீஸாகின.

மேற்படி படங்கள் நான்குமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிக பரிதாப தோல்விகளை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக சூர்யாவின் தம்பி கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளிவந்துள்ள ‘தேவ்’ தமிழகம் முழுக்க முதல் நாள் முதல் காட்சியிலேயே மண்ணைக் கவ்வியுள்ளது என்கிறார் தியேட்டர் உரிமையாளர்கள். அப்படம் முதல் நாள் வசூலில் 20 சதவிகிதத்தைக்கூட தொடவில்லையாம். அடுத்தபடமான ‘சித்திரம் பேசுதடி 2’இந்த ஞாயிறு வரை தாக்குப்பிடிப்பதே கஷ்டம் என்கிறார்கள்.

பிரியா வாரியரின் ‘ஒரு அடார் லவ்’ படத்துக்கு காதலர் தினத்தன்றாவது கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் அட்டர்ஃப்ளாப் லிஸ்டில் வந்தே நிற்கிறது. இன்னொரு படமான ‘காதல் மட்டும் வேணா’ படத்தை பிரிவியூவில் பார்த்த பத்திரிகையாளர்கள் 185 பேரில் 184 பேர் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரில் விவசாயம் பார்க்க முடிவெடுத்திருப்பதாகவும், மீதமுள்ள ஒருவர் சுய நினைவுக்கு வந்தபிறகே என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பது தெரியும் என்றும் கூறப்படுகிறது.