பொங்கலுக்குப் பிறகு வெளியான எந்தப் படமும் வசூலில் வெற்றிபெறாத நிலையில் நேற்று வெள்ளியன்று ரிலீஸான 4 படங்களில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ மட்டுமே ஓரளவு தப்பிப்பிழைத்திருக்கும் நிலையில் மற்ற மூன்று படங்களுமே மண்ணைக் கவ்வியுள்ளன.

கடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து சில படங்கள் ஹிட்டடித்து தமிழ் சினிமா சற்றே தலைநிமிர்ந்தது. அடுத்து பொங்கலுக்கு வெளியான ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ இரு படங்களுமே விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரையும் மனம் குளிரவைத்தன. அடுத்து வெற்றிகரமான தோல்விக்கு தனது ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தின் மூலம் பால்வார்த்து துவங்கிவைத்தார் சிம்பு.

அப்படம் துவக்கிய தோல்விக் கணக்கு கடந்த வாரமும் தொடர்ந்த நிலையில் இவ்வாரம் பல சர்வதேச விருதுகள் பெற்ற ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘டு லெட்’,இசக்கி கார்வண்ணனின் ‘பெட்டிக்கடை’,சீனு ராமசாமி, உதயநிதி ஸ்டாலின் கூட்டணியின் ‘கண்ணே கலைமானே’, ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ ஆகிய படங்கள் ரிலீஸாகியுள்ளன.

‘டு லெட்’ தமிழ் சினிமாவின் அபூர்வமான படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. மிகக் குறைவான தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸான இப்படத்திற்கு வழக்கம்போல் வெகுசனங்களின் ஆதரவில்லை. ‘பெட்டிக்கடை’ படத்துக்கோ வெற்றிலை,பாக்கு, பீடி,சிகரெட் விற்பனை அளவுக்குக் கூட வசூல் இல்லை. ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி என்கிற உலகமகா கோடீஸ்வரர் வங்கியில் கொஞ்சூண்டு கடன் வாங்கிவிட்டுக் கட்டமுடியாமல் தவிப்பதை தியேட்டர் ஆபரேட்டர்களே ஆட்சேபிப்பதால் படம் பரிதாப வசூலை சந்தித்துள்ளது.

இப்பட்டியலில் ஓரளவுக்கு ஆறுதல் அளித்திருக்கும் படம் பாலாஜியின் ‘எல்.கே.ஜி’. துவக்கக் காட்சிகளில் சற்று நொண்டியடித்த இப்படம், படம் குறித்த மவுத் டாக்கால் அடுத்தடுத்த காட்சிகளில் பிக் அப் ஆகிவருவதாகவும் கடந்த ஒன்றரை மாத தமிழ் சினிமாவின் தோல்விக்கணக்கை முடித்துவைக்கும் படமாகவும் மாற வாய்ப்புண்டு என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.