பொங்கலுக்கு விஸ்வாசமும், பேட்டயும் ஒரே தேதியில் ரிலீஸாவதை ஒட்டி பழைய புள்ளி விபரங்களைத் தேடிப் பார்த்தால், இதுவரையும் ரஜினியும் அஜீத்தும் ஒரே தேதியில் மோதிக்கொண்டதில்லை என்பது தெரிய வருகிறது.

இதற்கு முன்பு ரஜினி படத்துடன் அஜித் படம் வெளிவந்துள்ளதா என்று பார்த்தால், 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி விஜய்யுடன் அஜித் இரண்டாம் நாயகனாக இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படம் வெளிவந்தது.  ஆனால், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் தோல்விக்கு ரஜினி எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் அப்போது அஜீத் பத்தாயிரம் இருபதாயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த, டி.வி.எஸ்.பிஃப்டியில் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்த சின்ன நடிகர்தான்.

இதையடுத்து, 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி, ரஜினியின் ‘அருணாச்சலம்’ வெளியாகி மிகப் பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தியது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி அஜித் நடித்த ‘ராசி’ வெளியானது. ஆனால், ’ராசி’ பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்பதுதான் உண்மை. அதன் பிறகு, 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி ரஜினியின் ‘படையப்பா’  வெளியாகி, அதுவரை இருந்த அத்தனை சாதனைகளையும் முறியடித்தது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி அஜித்தின் ‘வாலி’ ரிலீஸாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அஜித்தின் கேரியரில் இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது.

இப்படி இதுவரை, ஒரே மாதத்தில்தான் ரஜினி, அஜித் படங்கள் வெளியானதே தவிர, ஒரே நாளில் இல்லை. இந்நிலையில், பொங்கல் அன்று ரஜினியின் ‘பேட்ட’ படமும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் மோதவிருக்கிறது. இரண்டு படங்களின் ட்ரெயிலர்களில் தற்செயலாகவோ, திட்டமிட்டோ அமைந்த உள்குத்து வசனங்கள் இரு தரப்பு ரசிகர்களையும் ரொம்பவே உசுப்பேத்தியிருக்கின்றன.

இந்த மோதலில் தமிழ் சினிமா பேட்டைக்கு யார் பிஸ்தா என்பது தெரிந்துவிடும்.