For a life-giving Rajamouli see what happened to Calicut ...

பாகுபலி படத்தில் காலக்கேயனாக நடித்த பிரபாகரன், “தனக்கு வாழ்க்கை கொடுத்த ராஜமௌலியின் பெயரை தான் தனது குழந்தைக்குச் சூட்டியுள்ளார்”…

பாகுபலி முதல் பாகத்தில் வில்லனான காலக்கேயனாக நடித்து அசத்தியவர் பிரபாகரன்.

ஒரு காலத்தில் சாப்பாட்டிற்கு கூட பைசா இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த இவருக்கு இயக்குனர் ராஜமௌலி தான் மறுவாழ்வளித்துள்ளார் என்று அவரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபாகரன் கூறியது:

“நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம். எப்போதும் கிரிக்கெட் தான் விளையாடிக் கொண்டிருப்பேன். சினிமாவில் ஆர்வம் இருந்ததில்லை. அதனால், நடிக்கவும் தெரியாது.

மெஹபூப் நகர் கொண்டங்கல் எனது சொந்த ஊர். அந்த ஊரில் நான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஒரு திருமணத்திற்காக ஐதராபாத் வரை சென்றேன். அங்கு எனது உடலை பார்த்துவிட்டு உறவினர் ஒருவர் உனக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறினர். அதன் காரணமாக நான் ஆறு மாதம் வரை காத்திருந்தது தான் மிச்சம்.

நான் வேலை தேடி அழைந்த போது ராஜமௌலி சார் ஆட்களை தேடி வருவதாக கேள்விப்பட்டேன். எனது நண்பர் என்னை அழைத்துச் சென்றார். என்னை பார்த்த இயக்குனர் உடனே மகதீரா படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு கூட்டிச் சென்றார். அங்கு என்னைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார். அதன் பிறகு வேலை முடிந்த பிறகு ஐதராபாத்திற்கு திரும்பி வந்தேன்.

ஒரு நாள் ராஜமௌலி சாரின் உதவியாளர் எனக்கு போன் செய்தார். நான் அவரது வீட்டிற்கு போனேன். அப்போது “மர்யாதை ராமண்ணா” படத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். எனக்கு நடிப்பு தெரியாது என்பதால், நடிப்பு பயிற்சி சொல்லிக் கொடுத்து மாதம் மாதம் உதவித் தொகையாக ரூ.10 ஆயிரமும் கொடுத்தார். படத்திற்கு ஏற்ப எனக்கு சம்பளமும் கொடுத்தார்.

அந்தப் பணத்தை வைத்து எனது கடன் முழுவதையும் அடைத்தேன். வேலையே இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு ராஜமௌலி சார் தான் வேலையும் கொடுத்தார். வாழ்க்கையும் கொடுத்தார்.

அதன் நினைவாக “எனது பையனுக்கு அவரது பெயரை வைத்துள்ளேன்”. அவரது படத்தில் நடித்த பிறகு எனக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“அதரிண்டிகி தரெடி” படத்தின் படப்பிடிப்பின்போது நான் பொள்ளாச்சியில் இருந்தேன். அப்போது ராஜமௌலி சார் எனக்கு போன் போட்டு பாகுபலி படம் பற்றிச் சொன்னார். அந்தப் படத்தின் மூலம் நான் பலர் அறியும் ஒரு நடிகனாகிவிட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் காலக்கேயன்.