‘சீறும் புலி’ என்ற பெயரில் எடுக்கப்படும் மாவீரன் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கம்பீரமான அவர் தோற்றத்துக்கு பாபி சிம்ஹா எப்படி செட் ஆவார் என்ற தமிழீழ ஆதரவாளர்களின் சந்தேகத்துக்கு, படத்தின் முதல் பார்வை மூலம் சந்தோஷமான பதிலை அளித்திருக்கிறார் பட இயக்குநர் ஜி.வெங்கடேஷ் குமார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, அவரது வாழ்க்கை வரலாற்றை செல்லுலாய்டில் பதிவு செய்யும் துணிச்சல் முயற்சியான ‘சீறும் புலி’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதில் அருகே நிற்கும் ஒரு புலியின் பிடறியில் கைவைத்தபடி கம்பீரமாக, ஏறத்தாழ பிரபாகரனை நினைவுக்குக் கொண்டுவரும் நெருக்கத்துடன் அமர்ந்திருக்கிறார் பாபி சிம்ஹா.

இன்று காலை முதலே வலைதளங்களில் வைரலாகிவரும் இந்த முதல் பார்வை போஸ்டரால் தமிழீழ ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மக்கள் தலைவனின் எழுச்சி. வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.