financier anbuchezhiyan problem in asokekumar sucide
சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தலைமறைவான மதுரை பைனான்சியர் அன்புசெழியனை பிடிக்க தனிப்படை அமைத்து தமிழக காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமாரின் படத் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்சன்ஸ் . நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கந்துவட்டியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய பணத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பல லட்சங்கள் வட்டியாக கொடுத்திருந்தும் தொடர்ந்து கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கேவலமாக அன்பு செழியின் மிரட்டுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
தான் மட்டுமல்லாமல் இயக்குநர் சசிகுமாரும் அன்புசெழியனால் மிரட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இயக்குநர் சசிகுமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இயக்குநர்கள் அமீர், கரு.,பழனியப்பன், சமுத்திரகனி, சேரன் உள்ளிட்ட இயக்குநர்களும் சசிகுமாருடன் சென்று புகார் அளித்தனர்.

மேலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் உடனடியாக அன்புசெழியனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மதுரை பைனான்சியர் அன்புசெழியன் திடீரென தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் தப்பிச் செல்ல அவர் முயற்சி செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அன்புசெழியனை பிடிக்க வளசரவாக்கம் போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த போலீசார் சென்னையில் உள்ள அன்புசெழியனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அவரை தேடி வருகின்றனர்.
மேலும் அன்புசெழியன் மதுரையில் உள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் விமானம் மூலம் மதுரை விரைந்துள்ளனர்
