பாக்கியராஜை ஹீரோவாக நடிக்கவைத்த போது உங்களுக்கு என்ன பைத்தியமா என பலர் என்னிடம்  கேட்டனர் ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை  என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார் .  மேடையில் பாக்கியராஜை எதிரில் வைத்துக்கொண்டே  அவர் இப்படி  கூறியது மேடையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.   டிஜிட்டல் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் என்பவர் இயக்கி நடிக்கும் படம் பச்சை விளக்கு , இப்படத்தில்  புதுமுக நாயகி தீஷா தாரா ,  ஸ்ரீ மகேஷ் , இமான் அண்ணாச்சி, உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர் . 

இப்படத்திற்கான இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை திரைப்படக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது .  இதில் இயக்குனர் பாரதிராஜா ,  இயக்குனர் பாக்யராஜ் ,  மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .  அதில் பேசிய இயக்குனர் பாரதிராஜா இந்தப்படம் பொதுநலன் கருத்துள்ள படம் ,  அதேநேரத்தில் படத்தில் கமர்சியலும்  இருக்கிறது .  இந்தப்படம் அரசாங்கம் எடுத்திருக்க வேண்டிய படம் .  இன்று நிறைய பேர் சாலை பயணத்தில் பச்சைவிளக்கை  மதிப்பதில்லை பச்சை விளக்கு போடும் முன்னை சென்றால்  போய்ச் சேர்ந்து விடுவோம் என்று அவர்களுக்கு தெரியவில்லை .  நிதானம் மிக முக்கியம் நிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும் நிதானமாகச் சென்றால்  நீண்ட நாள் வாழலாம் அப்படிப்பட்ட படம்தான் பச்சைவிளக்கு என்றார் .

அப்போது  பாக்யராஜ் குறித்து பேசிய அவர் ,  பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குனராக இருந்த போது வசனம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பேன்,  வித்தியாசமாக சொல்லிக் கொடுப்பான் ,  அவனையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது அப்போது கண்ணாடியை மாட்டி அவனை ஹிரோவாக்கினேன் .  அவனை ஹீரோவாக்கிய போது சிலர் என்னை பைத்தியம் பிடித்துவிட்டதா உங்களுக்கு  என கேட்டார்கள் ஆனால் என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன்,  பிறகு வளர்ந்தது வேறு கதை, ஆனால்  நான் விதை போட்டேன் அவ்வளவு தான் ,  ஆனால் விதை போடுவதற்கும்  ஒரு துணிச்சல் வேண்டும் என்றார் .