நடிகைகளுக்கு இணையாக பாடகிகளும் படுக்கைக்கு அழைக்கப்பட்டு படாதபாடு படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை சின்மயிக்கு அடுத்த படியாக அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருக்கிறார் ஒரு தெலுங்குப் பாடகி.

தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ’ஸ்ரீ ராமதாசு’, ’ஹேப்பி டேஸ்’, ’எமதொங்கா’, ’லயன்’ உள்ளிட்ட படங்களில் பாடி புகழ் பெற்றவர். சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றிருப்பவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் பாட வாய்ப்பு தேடத் துவங்கிய சமயத்தில் பலர் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதித்தால் மட்டுமே பாட வாய்ப்பு அளிக்கப்படும் என சில பிரபலங்கள் தன்னை வற்புறுத்தியதாகவும் அதையும் மீறி தான் மிகவும் கஷ்டப்பட்டே இந்த நிலைக்கு வந்ததாகவும் கூறினார்.

தனக்கு நடந்த அதிகபட்ச அதிர்ச்சியான சம்பவம் ஒன்றைப் பற்றி விவரித்த அவர்,’ இன்றைக்கும் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் அவர். தனது படத்தில் ஒரு நல்ல பாடல் இருப்பதாக பாடுவதற்கு ரெகார்டிங் தியேட்டருக்கு அழைத்தார். ஆனால் அங்கு இசைக்கலைஞர்கள் யாரும் இல்லை. அந்த டைரக்டர் மட்டுமே இருந்தார். தனிமையைப் பயன்படுத்தி என்னைப் படுக்கைக்கு அழைத்தவர் என்னை மிகவும் நெருங்கி ஆபாசமாகப் பேச ஆரம்பித்தார். என் விருப்பமின்மையை அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு கட்டத்தில் அவரது அத்துமீறல் அதிகமாகவே செருப்பைக் கழட்டிக்காட்டிவிட்டு தப்பி ஓடிவந்துவிட்டேன்’என்கிறார் பிரணவி. அந்த இயக்குநரின் பெயரை பிரணவி வெளியிட்டே ஆகவேண்டும் என்று தற்போது பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.