தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் பெப்சி(Fefsi-Federation of Film Employees Union) அமைப்பின் 2019-2021-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 17, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போது பெப்சியின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். 

தமிழ்ச் சினிமாவில் தொழிலாளர்களுக்கான அமைப்பில் உச்சபட்ச அமைப்பான பெப்சிக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதியோடு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்சி அமைப்பின் நிர்வாகிகள் சினிமா துறையைச் சேர்ந்த தொழிலாளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக சினிமா தொழிலாளர்களுக்காக தற்போது இருக்கும் 22 சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேர் மட்டுமே ஓட்டுப் போட்டு பெப்சி அமைப்பின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆக இந்த பெப்சி அமைப்பின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் மொத்தமே 66 பேர்தான். இவர்கள்தான் பெப்சி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் 5 துணைத் தலைவர்கள், 5 துணைச் செயலாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.  இந்த 66 பேரும்தான் பெப்சி அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்கள்.

அந்த வரிசையில் ஏதாவது ஒரு சினிமா சங்கத்தில் தலைவராகவோ, செயலாளராகவோ, பொருளாளராகவோ இருப்பவர்தான் பெப்சியின் அமைப்பில் நிர்வாகியாக இருக்க முடியும் என்பது சங்க விதிமுறை.

தற்போது பெப்சியின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மூர்த்தி, தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.பொதுச் செயலாளர் பதவிக்கு கலை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் சண்முகமும், சண்டை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் சோமசுந்தரம் என்கிற சுப்ரீம் சுந்தரும் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் சார்பில் சுவாமிநாதனும், தயாரிப்பு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்திரனும் போட்டியிடுகிறார்கள்.இந்த மூன்று பதவிகளுக்கு மட்டுமே போட்டி ஏற்பட்டுள்ளதால், இவைகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறவுள்ளது.