பிப்ரவரி மாத ரிலீஸுக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட படங்கள் காத்திருக்கும் நிலையில் கார்த்திக், ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள ‘தேவ்’ படமும் காதலர் தினத்தன்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் படக்குழு நேற்று அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கலந்த காதல் படமான இதில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இதே தேதியில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும்  பாலாவின்‘வர்மா’, ஜீ.வி.பிரகாஷின் ’100%காதல்’ஆகிய படங்களும் ஏற்கனவே ரிலீஸை அறிவித்துள்ளதால் இன்னும் நாலைந்து படங்களுடன்  இந்த காதலர் தினம் களைகட்டும் என்று தெரிகிறது. இந்த எண்ணிக்கை அதிகமாக அதிகமாக டென்சனாகிக் கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம் மட்டுமே.

தனது மகன் துருவ் அறிமுகமாகும் ‘வர்மா’ படம் பெரிய போட்டியின்றி வந்தால் நன்றாக இருக்கும் என்ற அவரது விருப்பம் தவிடுபொடியாகியிருக்கும் நிலையில், ‘வர்மா’வை கொஞ்சம் தள்ளிப்போடலாமா என்று இயக்குநர் பாலாவிடம் கோரிக்கை வைக்கலாமா என்று குழம்பிப்போயிருக்கிறாராம் விக்ரம்.