இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ பட ஹீரோ ஜீ.வி.பிரகாஷும், ‘வர்மா’ படத்தின் மூலம் அவர் அறிமுகப்படுத்தும் விக்ரமின் மகன் துருவும் காதலர் தினத்தன்று திரையில் மோதுகிறார்கள்.

தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை பாலா தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். இதில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் பிரதி தயாராகி சில வாரங்கள் ஆகியும் தேவையான தியேட்டர்கள் கிடைக்காததால் பட ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே வந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ‘வர்மா’ படத்தை காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்யவிருப்பதாக பாலா அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தனது ‘100 % காதல்’ படமும் அதே காதலர் தினத்தன்றே வெளியாவதாக ஜீ.வி.பிரகாஷ் அதிர்ச்சி அளித்தார். இதுவும் இதே பெயரில் வெளிவந்த தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பதுதான் ஹைலைட்.

இப்படங்கள் பற்றிய இன்னொரு கொடுமையான செய்தி 100% காதல் படத்தின் நாயகி ஷாலினி பாண்டே பாலா ரீமேக் செய்திருக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் நாயகி. இன்னொரு வன்கொடுமையான செய்தி  பாலா ரீமேக் பண்ணியிருக்கும் ‘வர்மா’ ஏறத்தாழ அவரது முதல் படமான ‘சேது படத்தின் கதை.