விஸ்வாசம் படத்தில் தனக்கான டப்பிங்கை இரவு முழுவதும் உறங்காமல் பேசிக் கொடுத்துள்ளார் தல அஜித் குமார். அப்போது அவரைக் காண்பதற்காக ஏவிஎம். ஸ்டூடியோவின் வெளியே ரசிகர்களும் ஏராளமானோர் உறங்காமல் காத்திருந்தனர். 

திரையுலகில் பல நடிகர்களுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ள போதும், திரையரங்கு வரை மட்டும் தான் அவர்களது வெறித்தனம் இருக்கும். ஆனால் அஜித்துக்கோ திரையுலகையும் தாண்டி வெறித்தனமாக அவரை நேசிக்கும் ரசிகர் கூட்டம் உண்டு. இதற்கு காரணம் ரசிகர் மன்றங்களைக் களைத்து விட்டு, அவரவர் வேலையைப் பாருங்கள் என்று அஜித் அக்கறையுடன் எடுத்த முடிவு தான். தன் மீதான பாசத்தை கண்மூடித் தனமாக காண்பிக்கும் ரசிகர்களை அஜித் எச்சரித்து கண்டிப்பது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் தான் விஸ்வாசம் டப்பிங்கின் போது நடந்துள்ளது. 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்தை இயக்கும் வாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கு கிடைத்துள்ளது. பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா, இந்தப் படத்தில் அஜித்துக்கு மீண்டும் ஜோடியாகியுள்ளார். டி இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக்குகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. 

படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வீரம் படத்தைப் போன்றே இந்தப் படமும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில் தனது சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை நடிகர் அஜித் குமார் இரவு முழுவதும் உறங்காமல் செய்து முடித்துக் கொடுத்துள்ளார். ஏவிஎம். ஸ்டூடியோவில் நடைபெற்ற டப்பிங் பணிகளுக்காக வந்த அஜித், விடிய விடிய தனது காட்சிகள் முழுவதுக்குமான டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார். 

முன்னதாக அவர் ஏவிஎம் ஸ்டூடியோவிற்குள் செல்வதைக் கண்ட ரசிகர்கள் நுழைவு வாயிலிலேயே காத்துக் கிடந்துள்ளனர். டப்பிங் பணிகளை முடித்து விட்டு வெளியில் வந்த அஜித் காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் நுழைவு வாயிலில் காத்துக் கிடந்த ரசிகர்கள், அஜித்தின் காரை பின் தொடர்ந்து ஓடவே காரை நிறுத்தி விட்டு இறங்கியுள்ளார். 

ரசிகர்கள் இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்துக் காத்துக் கிடந்ததை அறிந்த அஜித், குடும்பத்தையும் உறக்கத்தையும் விட்டு விட்டு தனக்காக இரவு முழுவதும் காத்திருந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்று கண்டித்துள்ளார். இனி இது போன்று செய்யக் கூடாது என்று ரசிகர்களை எச்சரித்த அஜித், பின்னர் செல்ஃபி எடுத்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவத்தை விஸ்வாசம் படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.