கனடா சென்றுள்ள பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், செல்ஃபி எடுக்க மறுத்த காரணத்தால் ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் தலைமையில் டபாங் டூர் என்ற பேரில், கனடாவில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், கத்ரீனா கைஃப், சோனாக்‌ஷி சின்ஹா, ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ், டெய்சி ஷா, பிரபுதேவா, மணிஷ் பால், குரு ரந்தவா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக, அவர்கள் அனைவரும் தற்போது கனடா சென்றுள்ளனர். அங்குள்ள வான்கூவர் நகரில் நடன நிகழ்ச்சிகள் உள்பட பலவற்றுக்கான ஒத்திகையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், கத்ரீனா கைஃப், நடன பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கான நடன பயிற்சி முடித்துவிட்டு, தங்கும் இடத்திற்கு புறப்பட்டுச் சென்ற கத்ரீனாவை ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுப்பதற்காக சூழந்து கொண்டனர்.

இதற்கு கத்ரீனா மறுக்கவே, ரசிகர்கள் கோபத்துடன் அவரை தாக்குவது போல நடந்துகொண்ட சம்பவம் தற்போது வீடியோ காட்சியாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கத்ரீனா சாலையில் நடந்து சென்றபோது, திடீரென அங்கு திரண்ட ரசிகர்கள், செல்ஃபி எடுக்க போஸ் தரும்படி வலுக்கட்டாயம் செய்தனர். ஆனால், ஏற்கனவே நடனப் பயிற்சி செய்ததால் சோர்ந்து காணப்பட்ட கத்ரீனா, தன்னால் போஸ் தர முடியாது என மறுத்தார். இதனால் கோபம் அடைந்த பெண் ரசிகைகள் சிலர், ‘’பெரிய நடிகை என சொல்லிக்கொள்ளும் உன்னால் ஒரு புகைப்படத்திற்கு போஸ் தர முடியாதா?,’’ என கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு பதில் அளித்த கத்ரீனா, ‘’இப்படி பேசாதீர்கள். நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். அதை புரிந்துகொள்ளாமல் ஏன் இப்படி பேசுகிறீர்கள்,’’ எனப் பதில் தந்தார். இருப்பினும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, வேறு வழியின்றி அவர் களைப்புடன் செல்ஃபி எடுக்க போஸ் தந்தார். எனினும், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அவரது பாதுகாவலர்கள் அங்கு வந்து ரசிகர் கூட்டத்தை அப்புறப்படுத்த தொடங்கினர். இதையடுத்து, அங்கிருந்த ரசிகர்கள், ‘’நாங்கள் ஒன்றும் கத்ரீனாவுக்காக வரவில்லை. சல்மான் கானுக்காக வந்துள்ளோம். கத்ரீனாவை நாங்கள் வெறுக்கிறோம்,’’ என கோஷமிட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.