வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் போலவே... வானொலி, மற்றும் டிவி தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் வானொலி பிரபலம் உடல்நல குறைவால் காலமான விஷயத்தை அவருடைய நண்பர் மிகவும் சோகமாக பதிவிட்டுள்ளார்.

வானொலி மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பிரபலமாகும் பலருக்கு அடுத்து டார்கெட் என்றால் அது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைதான். அந்த வகையில், இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானவர் நடராஜ சிவம். இதை தொடர்ந்து இவர் பல தமிழ் மற்றும் சிங்கள மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். நாடகங்களிலும் நடித்துள்ளார்.

74 வயதாகும் இவர், கடந்த சில நாட்களாக வயது மூப்பு பிரச்சனை காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு இலங்கையை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் இலங்கை வானொலி சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை, பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அப்துல் ஹமீத், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நண்பர் நடராஜ சிவமுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, 
என் ஆருயிர் தோழனை இழந்தேன்........
‘சிறுவர்மலர்’ காலத்திலிருந்து ஊடகத்துறையில் ஒன்றாகவே பயணித்தோம். இளமையில் நடராஜசிவத்தையும் தன்பிள்ளைகளுள் ஒருவனாகவே வரித்து எனது அன்னை பாசம் பாராட்டுவார். ஒன்றாகவே உணவருந்துவோம். வெற்றிலை போடும் பழக்கம் இளவயதிலேயே நடராஜசிவத்துக்கு உண்டு என்பதால் எனது அன்னை அன்போடு உரலில் இடித்துத் தரும் வெற்றிலையை ஆசை ஆசையாயச் சுவைத்து உண்டபின், எனது அன்னையின் சேலையைப் போர்த்திக்கொண்டு இருவருமே ஒன்றாக உறங்குவோம். ‘இளைஞர் மன்றம்’ நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே கலந்து கொள்வோம், சன்மானம் பெறும் வானொலிக் கலைஞர்களாக இருவரும் ஒன்றாகவே தெரிவானோம். அறிவிப்பாளர் தேர்வுக்கும் ஒன்றாகவே சென்று தெரிவானோம். வாரந்தோறும், நமக்குக் கிடைத்த ஊதியத்தையெல்லாம் போட்டிபோட்டுச் செலவழித்து கொழும்பின் பிரபல உணவங்களையெல்லாம் தேடிச்சென்று விதவிதமான உணவுவகைகளை உண்டு மகிழ்வோம். காலம் நம் இருவரையும் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் சென்றது.
இந்து கலாசார அமைச்சு நம் இருவருக்குமே ‘கலையரசு’ எனும் ‘வாழ்நாள் சாதனை விருது’ வழங்கியபோதுதான் கடைசியாக சந்தித்தோம். என நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார்.