கொரோனா தொற்று காரணமாக முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் மட்டும் தினம் தோறும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து, குணமாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட பிரபல நடிகர் விஷால், மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து பத்திரமாக மீண்டனர். இது குறித்து நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இப்படி தமிழகத்தை பொறுத்தவரை பலர் இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும், தவிர்க்க முடியாமல் சில இழப்புகளும் ஏற்படுகிறது.

அந்த வகையில் தமிழில் கிட்ட தட்ட 25 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த, லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வி.சாமிநாதன், கொரோனா பிரச்சனை காரணமாக மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

1994 ஆம் ஆண்டு, சரத்குமார் நடித்த அரண்மனை காவலன் படத்தின் மூலம், இந்த நிறுவனம் படங்களை தயாரிக்க துவங்கியது. மேலும் தற்போது வரை, பல சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது. குறிப்பாக தனுஷின் புதுபேட்டை, அன்பே சிவம், ஒரு நாள் ஒரு கனவு, சிலம்பாட்டம் என பல படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சுவாமிநாதனுக்கு பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.