பிரபல பாடகர் உதித் நாராயணனுக்கு,  மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் அவருடைய வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பல இந்தி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு பாடல் பாடியுள்ளவர் உதித் நாராயணன். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான 'காதலன்' படத்தின் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமான இவர், இதைத்தொடர்ந்து சிவாஜி ,காதலா காதலா, அன்பேசிவம் ,கில்லி, படிக்காதவன், உள்ளிட்ட படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரல் மூலம் திரைப்பட பாடல்களுக்கு அழகு சேர்த்தவர்.  இந்நிலையில் இவரை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து உதித் நாராயணன் மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் விசாரணையில் அந்த செல்போன் எண் நாராயணனின் பாதுகாவலரின் பெயரில் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அந்த பாதுகாவலரை விசாரித்த போது ஒரு மாதத்திற்கு முன்பு, வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் தன்னுடைய செல்போன் திருட்டு போனதாக கூறியுள்ளார்.

 திருட்டு போன செல்போனிலிருந்து உதை நாராயணனுக்கு மிரட்டல்கள் வந்துள்ளது.  இதையடுத்து தற்போது அவருடைய வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.