தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் டெலிபோன் சுப்பிரமணி காலமானார்.

Telephone Subramani Death : தமிழ் படங்களில் காமெடியனாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் டெலிபோன் சுப்பிரமணி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுப்பிரமணி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67. அவரின் மரணம் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

யார் இந்த டெலிபோன் சுப்பிரமணி?

நடிகர் டெலிபோன் சுப்பிரமணி, மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதில் விவேக்குடன் இவர் நடித்த ஓட்டல் காமெடி காட்சி பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. இதன் பின்னர் வடிவேலு உடன் எலி, ஜீவன் நடித்த யூனிவர்சிட்டி போன்ற படங்களில் நடித்தார் சுப்பிரமணி. இவர் பெரும்பாலும் விவேக் உடன் சேர்ந்து தான் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

டெலிபோன் சுப்பிரமணி என அழைக்கப்படுவது ஏன்?

தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார் டெலிபோன் சுப்பிரமணி. இவரது பெயருக்கு முன் டெலிபோன் என்கிற அடைமொழி வர காரணம் அவரது வேலை தான். இவர் சினிமாவுக்கு வரும் முன்னர் டெலிபோன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கிருந்து வந்ததால் இவரை டெலிபோன் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.