famous actress put idle shop in street
மலையாளத் திரையுலகில், மம்மூட்டி, மோகன் லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 90களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கவிதா லட்சுமி. சினிமா மட்டும் இன்றி நாடகம் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தன் கணவரின் சொந்த ஊரான கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் வசித்து வருகிறார். தன் மகன் ஆகாஷை வெளிநாட்டில் படிக்க வைக்க ரூ.36 லட்சம் செலவு செய்ததுடன் மகன் படிப்பை முடிக்க 50 லட்சம் கடன்பட்டுள்ளார்.

தற்போது இவருடைய மகள் உமா பாரதி, நெய்யாற்றின்கரையில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிள்ளைகளை பார்த்துக்கொள்வதற்காக சில நாட்கள் திரையுலகை விட்டும், சின்னத்திரையை விட்டும் ஒதுங்கி இருந்த இவருக்கு நாளடைவில் நடிப்பு வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.
இவருடைய கணவரும் உடல் நலம் குன்றிவிட, மகன் படிப்புக்காக வாங்கிய கடனை சமாளிக்க, இவர் தற்போது சாலையில் இட்லி தோசை சுட்டு வியாபாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மம்முட்டியிடம் உதவி கோரினேன். அவர் மூலம் ஒரு படத்தில் டப்பிங் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஒவ்வொருவரையும் சென்று அவர்களுக்கு இருக்கும் பிஸி நேரத்தில் தொந்தரவு செய்ய முடியாது. கடவுள் புண்ணியத்தில் இப்போது இரண்டு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இருந்தாலும் என் மகனின் படிப்புத் தேவை பெரிது என்பதால், நண்பர்கள், உறவினர்கள் உதவி செய்ய, இந்த சாலையோரக் கடையை நடத்தி வருகிறேன். சில நாட்கள் வியாபாரம் நன்கு இருக்கும். சில நாட்கள் வெகு நேரம் ஆகும். கொண்டு வந்த மாவு தீரும் வரை கடை இருக்கும். எப்படியும் நான் என் மகனின் படிப்புச் செலவை சரிக்கட்டியாக வேண்டும் என்று கூறுகிறார் கவிதா லட்சுமி.
முன்னணி நடிகையாக இருந்த கவிதா லட்சுமி கஷ்டப்பட்டு தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வருவது மலையாள திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
