நானா படேகர் மீது பாலியல் புகாரில் தலையிட்ட நடிகை ராக்கி சாவந்த்-க்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததுடன், சமூகவலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்த தனுஸ்ரீ தத்தா அண்மையில் 'ஹார்ன்ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நடித்தபோது, பிரபல நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாகவும், தன் குடும்பத்தினருடன் சென்றபோது நானாபடேகர் ஆட்கள் தன்னை தாக்கினார்கள் என்றும்புகார் கூறியிருந்தார். 

மேலும் நானா படேகர் பெண்களை மதிப்பது இல்லை. சில நடிகைகளை அடித்து இருக்கிறார்.என்னைப்போல் பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்துக்கொண்டு பொறுமையாகஇருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். தனுஸ்ரீ தத்தாவின் இந்த குற்றச்சாட்டுகள் இந்தி திரைப்பட உலகில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மூத்த நடிகைகள் சிலர் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், இந்தி திரைப்பட உலகில் தாங்கள் சந்தித்த சில மோசமான பாலியல் சீண்டல் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அதேநேரத்தில், தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டில் உண்மையில்லை எனக் கூறி பிரபல குத்துப் பாடல் நடிகையான ராக்கி சாவந்த் பரபரப்பை கிளப்பினார். நானா படேகர் – தனுஸ்ரீ தத்தா நடித்த ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் ராக்கி சாவந்தும் நடித்துள்ளார். இதனால், படப்பிடிப்பு தளத்தில் நடந்தவையாக அவர் சில விஷயங்களைக் கூறியிருந்தார். அதாவது, "தனுஸ்ரீ குற்றஞ்சாட்டும் அந்த தேதியில் நானும் படப்பிடிப்பு அரங்கில் இருந்தேன். என்னிடம் ஒருபாடலுக்கு ஆடவேண்டும் என்று நானா படேகர் கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்தேன். அப்போது தனுஸ்ரீ தத்தா நான்கு மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள். அவருக்கு பதிலாகத்தான் என்னைஆட அழைத்து இருந்தார்கள். தனுஸ்ரீ தத்தா அதிக போதையில் மயக்கத்தில் இருந்தார்.

அவரைப்பற்றிகவலைப்படாதே நீ நடித்துக்கொடு என்று நானா படேகர் என்னிடம் கூறினார். நான் நடித்து கொடுத்தேன்" என்றார். நடிகை ராக்கி சாவந்தின் இந்த கருத்து, நானா படேகருக்கு பலம் சேர்த்த நிலையில், ராக்கி சாவந்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுழைந்த நபர் ஒருவர், மிகவும் ஆபாசமாக பதிவிட்டதுடன், ராக்கி சாவந்த் குறித்து கமெண்ட் செய்யவும் என்று கேட்டிருந்தார். இந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மும்பையின் ஓசிவரா காவல்நிலையத்தில், ஆபாச கமெண்ட் குறித்து புகார் அளித்தார். மேலும், தாம் யாருக்கு ஆதரவாகவும் பேசவில்லை என்று கூறிய அவர், படப்பிடிப்பு தளத்தில் எது நடந்ததோ, அதையே கூறியதாகவும் ராக்கி சாவந்த் விளக்கம் அளித்துள்ளார்.