‘செவப்பா இருக்கிறவன் பொய்சொல்லமாட்டான்’ என்ற நம்பிக்கையில் நேற்று முதல் கிளம்பிய ’எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி...எம்.ஆர். ராதா வேடத்தில் சிம்பு’ என்கிற செய்தியில் துளியும் உண்மை இல்லை என்று மறுக்கிறார் ஒரு இயக்குநர்.

பழம்பெரும் நடிகரான எம்.ஆர். ராதாவின் பேரனான ஹக், ‘சங்கிலி புங்கிலி கதவைத் தொற’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இவர் தனது இரண்டாவது படமாக தனது தாத்தா எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப்போவதாகவும் அதற்காக அவர் சம்பந்தமாக எழுதப்பட்ட நூல்களை தீவிரமாகப் படித்துக்கொண்டே திரைக்கதை அமைத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

ஹக் ஒரு பக்கம் திரைக்கதை எழுதிக் கொண்டிருக்க அத்திரைக்கதைக்கு கண், காது மூக்கு வைத்த சிலர், அப்படத்தில் எம்.ஜி. ஆர் பாத்திரமும் முக்கியத்துவம் பெறப்போவதாகவும் அந்த வேடத்தில் எம்.ஜி.ஆரைப்போலவே சிவப்பாக இருக்கிற அரவிந்தசாமி நடிக்கப்போவதாகவும் ராதாரவி வேடத்தில் வம்புத் தம்பி சிம்பு நடிக்கப்போவதாகவும் கிளப்பி விட்டிருந்தனர்.

இந்த சிவந்த வதந்தியை மேலும் பரவ விடாமல் உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு வெளியிட்ட இயக்குநர் ஹக் ‘நான் எடுக்கவிருப்பது முழுக்க முழுக்க என் தாத்தாவின் கதையை மட்டும்தான். அடுத்து அதிகாரபூர்வமாக நான் அறிவிக்கும்வரை படம் குறித்து வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.