2017ல் 6 தேசிய விருதுகள், ’18ல் 4 தேசிய விருதுகள் பெற்ற தமிழ்த் திரையுலகம் இந்த வருடம் சம்பிரதாயத்திற்காகத் தரப்படும் பிராந்திய விருதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு பெரிய பூஜ்யத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. இதனால் தரமான படங்கள் தந்த சில இயக்குநர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.

இன்று நண்பகல் 3 மணி அளவில் 2019ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த படம், சிறந்த நடிகர்,சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட முக்கிய கேடகிரிகளில் வழக்கம்போல் இந்திப்படங்களே அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. தென்னிந்திய மொழிகளைப் பொறுத்தவரை கேரள ஒளிப்பதிவாளர் மறைந்த எம்.ஜே.ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும், கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது மட்டுமே குறிப்பிடத்தக்கவை.

அதைவிட கொடுமை தமிழில் சம்பிரதாயமாகத் தரப்படும் பிராந்திய விருதை இதுவரை கேள்விப்படாத ’பாரம்’ என்ற ஒரு படம் மட்டுமே பெற்றுள்ளது. இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆக இப்படம் நீங்கலாக தமிழ் சினிமா ஒரு விருதைக் கூட பெறாதது கோடம்பாக்கத்து ஆசாமிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான விருதுபெறத்தக்க சில படங்களின் பெயர்களை முகநூலில் சினிமா ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதில் முதலிடத்தில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ இருக்க, ‘பரியேறும் பெருமாள்’,’96,’ராட்சசன்’,’வடசென்னை’,’கனா’,’2.0’ஆகியவை விருதுபெறத் தகுதி இல்லாத படங்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.