Every week every caste should come down in the dump - actor Sathyaraj stinging ...
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்கள் கழிவு தொட்டியில் இறங்கினால், உடனே மனித கழிவுகளை அள்ளுவதற்கு கருவி கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நடிகர் சத்யராஜ் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமே புரட்சி செய்பவர்களுக்கு மத்தியில் நிஜத்திலும் புரட்சி செய்து வாழ்ந்து வருபவர் நடிகர் சத்யராஜ்.
பெரியாரின் கொள்கைகளையும், தமிழர் மாண்பையும் பின்பற்றும் இவர், சாதியையும், சமூகத்தில் நடந்துவரும் பல அவலங்களை குறித்தும் குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக குரல் கொடுத்த சத்யராஜ், "இன்னும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவல நிலை இருந்து வருகிறது. நாம், மோஷன் பரிசோதனைக்காக மலத்தை எடுப்பதற்கே தயங்குகிறோம் அல்லவா. ஆனால், இதை ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் அப்படியே கையால் அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதற்கு இன்னும் கருவி கூட கண்டுபிடிக்கவில்லை. இதற்கு உடனடி தீர்வு எது என்றால், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு சாதியினரும் கழிவு தொட்டியில் இறங்க வேண்டும் என்று ஒரு அவரச சட்டம் போட்டால் போதும். உடனே மனித கழிவுகளை அள்ளுவதற்கு தனியாக கருவி ஒன்று கண்டுபிடித்துவிடுவார்கள்.
சமீபத்தில் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வந்த அறம் படத்தில் கூட குழிக்குள் விழுந்த சிறுமியை காப்பாற்ற கருவி கண்டுபிடிக்கப்படவில்லை" என்று அவரது பாணியில் சுட்டிக் காட்டி பேசினார் நடிகர் சத்யராஜ்.
