இதுவரை சுமார் ஒரு டஜன் முறைக்கும் மேல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் பின்வாங்கிய தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ஒரு வழியாக இம்முறை நிஜமாகவே ரிலீஸாகவிருக்கிறது. வரும் நவம்பர் 29ம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு ஓராண்டுக்கு முன்பே ரிலீஸுக்குத் தயாராக இருந்தும் ஃபைனான்ஸ் பிரச்சினைகளால் மூச்சுத் திணறி வந்த படம் தனுஷ், கவுதம் மேனன் கூட்டணியின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்த இப்படத்துக்கு தற்போது ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’படத்தால் நல்ல காலம் பிறந்துள்ளது.

அசுரன் அடைந்த மாபெரும் வெற்றியால் ஏற்கனவே கேட்ட விலையை விட இரண்டு மடங்கு தர விநியோகஸ்தர்கள் முன் வந்துள்ளதால் தயாரிப்பாளரின் அத்தனை பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தனுஷின் அசுரன் 4 வாரங்களைக் கடந்தும் இன்னும் பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதாலும் நவம்பர் 8, 15,22, ஆகிய தேதிகளில் தலா மூன்று நான்கு படங்கள் ரிலீஸாவதாலும் ‘எ.நோ.பா.தோ’பட ரிலீஸை நவம்பர் 29க்கு தள்ளி வைத்திருப்பதாகவும் இம்முறை 100% உறுதியாக இப்படம் ரிலீஸாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில்  சாமி மீது சத்தியம் செய்கிறார்கள்.