Empty seats in kala theater Rajini is Mass
ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் “காலா” இன்று பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெளியானது. ஆனால், இது வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு தற்போது இல்லை. ரஜினிகாந்த் படங்களில் “பாபா” மட்டுமே தமிழகத்தில் பிரச்சினையை எதிர்கொண்டது அதுவும் பாமக என்ற அரசியல் கட்சியினால்.
வேறு எந்தப் படமும் காலாவுக்கு ஏற்பட்டது போன்ற சிக்கல்களைச் சந்திக்கவில்லை. கடந்த சில நாட்களாக அதிர்வை உண்டாக்கிய பிரச்சனைகளால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதேபோல, பாண்டிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 திரையரங்குகளில் “காலா” வெளியானது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்ததால் திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ரஜினி படங்களுக்கு அதிகாலையிலேயே வந்து ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால் முதல் நாள் முதல் காட்சிக்கே காற்று வாங்கியது.
நாமக்கல்லில், ரசிகர்கள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. 20 திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையரங்குக்கு வருகை தந்த போதிலும், எதிர்பார்த்த ரசிகர்கள் கூட்டம் வரவில்லை என திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், சில திரையரங்குகளில் இருக்கைகள் காலியாக உள்ளதாகவும் திரையரங்க ஊழியர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த தூத்துக்குடியில் எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியான முறையில் காலா திரைப்படம் திரையிடப்பட்டது. தூத்துக்குடி ஸ்ரீ பாலகிருஷ்ணா திரையரங்கில், காலா திரைப்படம் அமைதியான முறையில் திரையிடப்பட்டது.
முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று தினங்களுக்கு கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். இதேபோல், தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் அதிக கூட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
