பிரதமர் நரேந்திர மோடியை ஒரு சிறந்த தேசபக்தராக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம்.நரேந்திரமோடி’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் தேர்தல் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11 முதல் மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால், அனைத்துக் கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு 'பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. 

ஓமங்க் குமார் இயக்கும் இந்தப் படத்தை லெஜண்ட் குலோபல் சார்பில் சந்தீப் சிங் மற்றும் சுரேஷ் ஓபராய் இணைந்து, 23 மொழிகளில் தயாரித்துள்ளனர். 'பிஎம் நரேந்திர மோடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். 

முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாக இந்தப் படத்தை வெளியிடுவது என்பது தேர்தலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று பி.ஜே.பி. தவிர்த்த அரசியல்வாதிகள் குற்றம்சாட்டினர். இதனால், தேர்தலின் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடியும் வரை இந்தப் படத்தை வெளியிடாமல் ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. 

இந்நிலையில், ''தேர்தல் விதிமுறைப்படி தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற விளம்பரங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியிடவேண்டும்; ஆகவே, இந்தத் திரைப்படம் வெளியாவதில் பிரச்சினை உள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டோர் விளக்கம் தரவேண்டும்’’ என்று படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டோருக்கு டில்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பிர் சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் பி.ஜே.பி.யினரின் பெரும் பிரச்சார ஆயுதமாக நம்பப்பட்ட அப்படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.