10 மற்றும் 12ம் வகுப்பில் சாதித்த மாணவ, மாணவிகளை கெளரவிக்கும் வகையில் விஜய் நடத்தும் கல்வி விருது விழா, முதல் கட்டம் முடிந்துள்ள நிலையில், தற்போது 2ம் கட்ட விழாவுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

TVK Education Awards: Phase 2 ceremony tomorrow - Official announcement released! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அவர்களை நேரில் அழைத்து, விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். முதல் கட்டமாக கடந்த மே 30ந் தேதி அன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 88 தொகுதிகளை சேர்ந்த சுமார் 600 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா

இதனையடுத்து, இரண்டாவது கட்ட விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நாளை (04.06.2025) நடைபெற உள்ளது. இதில், தஞ்சாவூர், திருச்சி, தர்மபுரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, விருதுநகர், விழுப்புரம், இராமநாதபுரம், ஈரோடு, கரூர் உள்ள மாவட்டங்களில், 84 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பரிசு பெற உள்ளார்கள். அவர்களுக்கு நடிகர் விஜய் தன் கையால் விருதுகளை வழங்கி கெளரவிக்க உள்ளார்.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்காலச் சமுதாயத்தின் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்கள், இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் முதற்கட்டமாக நடைபெற்ற விழாவின் போது பேசுகையில், தான் அடுத்து நடைபெற உள்ள இரண்டு கட்ட விழாவுக்கும் சேர்த்து பேசியதாக கூறினார். இதனால் நாளை நடைபெற உள்ள விழாவில் நடிகர் விஜய் பேசாமல், நேரடியாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகளை வழங்குவார் என கூறப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்வோருக்கு சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.