பிகில், பிரச்னையைத் தொடாமல் திரைக்கு வந்து விடுமா என்கிற எதிர்பார்ப்பு  எகிறிக் கொண்டு இருக்கிறது. அரசுக்கு எதிராக குரல் கொடுத்தது இப்போது அவரது படத்திற்கு எதிராக திரும்பி நிற்கிறது. பிகில் விழாவில்  அவர் பேனர் விவகாரத்தை கிழித்தது அமைச்சர்களை கீறி இருக்கிறது.

எந்தெந்த தியேட்டர்களில் பிகில் வெளியாகிறதோ அங்கெல்லாம் கடுமையான  கண்காணிப்பு  கருட பார்வையுடன் இருக்கும் என்பதே நிதர்சனம். இதற்கிடையில் முதல்வர் எடப்பாடியை சந்திக்க  விஜய்  நேரம் கேட்டிருந்ததாகவும் அதற்கு சந்திக்க விருப்பம் இல்லை என பதில் வந்து விட்டதாகவும் கோலிவுட்டில் சில புள்ளிகள் கூறி வருகிறார்கள். அதாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு முன் தங்களை பார்த்து மன்னிப்பு கேட்கவேண்டும் என நினைக்கிறார்களாம் அமைச்சர்கள். 

அசுரன் படத்தில் வரும் ஒரு காட்சியில், தனுஷ் ஊர் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவார். ஊரார் முன் பஞ்சாயத்து தலைவரிடம் மன்னிப்பு கேட்பார் தனுஷ்.  ஊர் தலைவரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டால் போதுமா?  ஊர் தலைவரிடம் மட்டும் அல்ல. ஊர் தலைவர் முன் மக்கள் அனைவரிடமும் தனித்தனியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறுவார்கள். வேறு வழியின்றி தனுஷ் ஊர் மக்கள் அனைவரிடமும் தனித்தனியாக மன்னிப்பு கேட்பார். அந்த நிலை தான் பிகில் படத்தை வெளியிடுவதில் விஜய்க்கு நேர்ந்து இருக்கிறது.

பிகில் படம் தொடர்பான தணிக்கை இன்று  10 ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் தணிக்கை பெண் அதிகாரி டெல்லி சென்று விட்டார். அந்த பெண் அதிகாரி மிகவும் நேர்மை தவறாதவர் என பெயர் எடுத்தவர். மத்திய மாநில அமைச்சர்களுக்கு வளைந்து கொடுக்க மாட்டார் என சொல்கிறார்கள். அதனால் திரையிடப்படும் தியேட்டர்களில்தான் கண்காணிப்பு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தியேட்டர் கட்டணம் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் லைசன்ஸ் காலியாகும் ஆபத்து இருக்கிறது.

இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் 140 கோடியில் தயாரித்து 142 கோடி சம்பாதிப்பதற்கு எதுக்குய்யா சினிமா எடுக்கணும் என்று தயாரிப்பு நிறுவனம்  நினைக்கிறதாம்?