தீபாவளி மோதல்கள் முடிந்து இரு வாரங்கள் கழித்து ‘ஆதித்ய வர்மா’படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியோடு அறிவித்துள்ளது. பெரிய படங்களோடு மோதாமல் ஒதுங்கிக்கொண்டதற்கு தன்னடக்கம் எதுவும் காரணம் இல்லை. ஆதித்ய வர்மா பாலா இயக்கிய வர்மாவை விட வும் சுமாராக வந்திருப்பதே இம்முடிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அர்ஜூன் ரெட்டியின் ரீமேக்காக முதலில் பாலா இயக்கிய ‘வர்மா’படத்தைத் தூக்கி எறிந்த இ4 எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் படத்தை இன்னும் பல மடங்கு சிறப்பாக தயாரித்து ஜூனில் வெளியிடுவோம் என்று அறிவித்திருந்தது. ஆனால் அந்த அறிவிப்புக்கு அப்புறம் அப்படம் குறித்து வெளிவந்த எந்த செய்திகளும் சுவாரசியமாக இல்லை. படப்பிடிப்புகள் ரகசியமாக நடந்தன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சுரத்தாக இல்லை. நிறைய ரீ ஷூட்கள் நடந்தன. மகன் மேல் உள்ள அதீத அக்கறையால் டைரக்டரின் சுதந்திரத்தில் நடிகர் விக்ரம் அதிகம் மூக்கை நுழைத்ததாகத் தகவல்கள் வந்தன. அப்படி வந்த எந்த செய்திகளுக்கும் விக்ரம் தரப்போ தயாரிப்பாளர் தரப்போ மறுப்புச் செய்திகள் கூட கொடுக்க முடியாத அளவுக்கு, இரண்டாவது முறையாக படத்தை ஆரம்பித்த வகையில் செம டயர்டாகி இருக்கிறது பட நிறுவனம்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளோடு ‘ஆதித்ய வர்மா’பட ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. அதில் நவம்பர் 8ம் தேதி, அதாவது தீபாவளிக்கு இரு வாரங்கள் கழித்து வரும் வெள்ளியன்று படம் ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி ரிலீஸ்களாக இப்போதைக்கு விஜய்யின் ‘பிகில்’ கார்த்தியின் ‘கைதி’ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த லிஸ்டில் இன்னும் ஒன்றிரண்டு படங்கள் இணையக்கூடும். அப்படி இணையும் சமயத்தில் அனைத்துப் படங்களுமே சுமாராக இருந்தால் மட்டுமே நவம்பர் 8ம் தேதியன்று தியேட்டர்கள் கிடைக்கும். அப்படி இல்லாமல் ஏதாவது ஒரு படம் சூப்பர் ஹிட் ஆனாலே ‘ஆதித்ய வர்மா’இன்னும் சில வாரங்கள் தள்ளிப்போகக்கூடும்.