பிரபல மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். "செகண்ட் ஷோ" என்ற மலையாள படம் மூலம் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் துல்கர் சல்மான். துறுதுறு சாக்லெட் பாயாக வலம் வந்த துல்கர் சல்மான் இளம் பெண்களின் கனவு நாயகன் பட்டியலில் டாப் ரேங்கில் உள்ளார். நடிகரின் மகன் என்பதால் ஈஸியாக சினிமாவில் முன்னணிக்கு வந்துவிட்டார் என்ற பேச்சை, தனது அசத்திய நடிப்பின் மூலம் சுக்குநூறாக உடைத்தவர் துல்கர் சல்மான். 

பெங்களூர் டேஸ், காம்ரேட் இன் அமெரிக்கா, கம்மாட்டி பாடம், பறவா உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தன. குறிப்பாக மற்றவர்களை சந்தோஷப்படுத்திவிட்டு மறைந்து போகும் மனிதனாக துல்கர் சல்மான் நடித்து அசத்திய படம் "சார்லி" . அந்தப் படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. எந்த நேரமும் உற்சாகத்துடனும், எதையும் பாசிடிவாகவும் எடுத்துக்கொள்ளும் துறுதுறு இளைஞனாக துல்கர் சல்மான் பட்டையை கிளப்பியிருந்தார். மலையாளத்தில் மட்டுமல்லாது, கோலிவுட், பாலிவுட் படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார் துல்கர் சல்மான். 

தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்கள் துல்கர் சல்மானின் நடிப்பு திறனுக்கு சரியாக தீனி போட்டது. இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய ரசிகைகளின் தூக்கத்தை கெடுத்த துல்கர் சல்மான். வெறும் சாக்லேட் பாயாக மட்டும் வலம் வராமல், படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதற்காக தனது கெட்-அப்பை மாற்றி நடித்து வருகிறார். குறிப்பாக சார்லி திரைப்படத்தில் தாடி வைத்து, தலையை முடியை அதிகமாக வளர்த்து வித்தியாசமான தோற்றத்தில் தோன்றிய துல்கர் சல்மானின் கெட்-அப் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. 

இந்தி, மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் துல்கர் சல்மான், அடுத்து மலையாளத்தில் நடிக்க உள்ள குரூப் படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். துறுதுறு சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த துல்கர் சல்மான், அந்தப் படத்திற்காக பெரிய மீசை, புது ஹேர் ஸ்டைல் என டெரர் லுக்கிற்கு மாறியுள்ளார். அந்தப் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.