உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்களுக்கு தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஆஸ்கர் விருதை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு காரணம் ஒட்டுமொத்த திரைத்துறையிலேயே ஆஸ்கர் விருது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் ஆஸ்கர் விருது வழங்கு விழா கொரோனா காரணமாக ஏற்கனவே ஒருமுறை ஆஸ்கர் தேதி மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்த கொடூர வைரஸிடம் இருந்து மக்களை காப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸின் பரவலை தடுக்க பொதுமக்கள் யாரும் அதிகம் கூட வேண்டாமென உலக நாடுகள் பலவும் கேட்டுக்கொண்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து திரைப்பிரபலங்களை காக்கும் விதமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி மாதம் 28ம் தேதி நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  2021ம் ஆண்டு மட்டும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் தேதி பிப்ரவரி மாதம் வரை வெளியாகும் படங்களையும் ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர். இறுதி பட்டியல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி ஒன்றாம் தேதியும், நாமினேஷன் பற்றிய அறிவிப்பு மார்ச் 5ம் தேதியும் வெளியாகும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25, 2021ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட சம்பவத்தின் போதும், 1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி நடந்த போதும் ஆஸ்கர் விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரலாற்றிலேயே நான்காவது முறையாக கொரோனா வைரஸ் காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.