விஷாலின் ‘அயோக்யா’ படத்தில் டப்பிங் கலைஞர்கள் அத்தனை பேர் பெயரையும் டைட்டில் கார்டில் போடாமல் இருட்டடிப்பு செய்த இயக்குநரைக் கண்டித்த பெண்ணிடன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அப்பட நாயகி ராஷி கண்ணா.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, ர.பார்த்திபன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘அயோக்யா’ ஓரளவு சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்துக்கு ராஷி கண்ணாவுக்கு ரவீனா என்பவர் டப்பிங் பேசியிருந்தார். ஆனால் டைட்டில் கார்டில் என்ன காரணத்தாலோ ரவீனா உட்பட எந்த டப்பிங் கலைஞரின் பெயரும் இடம்பெறவில்லை.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்த ரவீனா,...’அயோக்யா’ படத்தில் டப்பிங் கலைஞர்களின் பெயர் எண்ட் டைட்டில்களில் கூட இடம்பெறவில்லை. மெஸ் அண்ணாக்கள், டிரைவர்கள், பெயிண்டர்கள்,சவுண்ட் மேலாளர்கள் என அனைவரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.ஆனால் எங்கள் டப்பிங் கலைஞர்களின் பெயர்கள் மட்டும் அடிக்கடி மறக்கப்படுகிறது. காத்திருக்கிறோம்’ என்று பதிவிட்டிருந்தார்.

அதைப் படித்து அதிர்ந்துபோன நடிகை ராஷி கண்ணா,’ முதலில் மன்னிப்புக் கோருகிறேன். உங்களுடைய அருமையான குரலை எனக்குக் கொடுத்து என் நடிப்புக்குச் சிறப்பு சேர்த்தீர்கள்.உங்களுக்கு என் நன்றி. திரைத்துறையில் உங்களுக்கு இன்னும் அற்புதமான பயணம் காத்திருக்கிறது’ என்று பதிலலித்திருக்கிறார்.