மனைவி ஸ்ரீதேவியை துபாயில் விட்டுவிட்டு மும்பை  ஏன் போனீங்க ? திரும்பவும் ஏன் துபாய் வந்தீங்க? ஹோட்டல் அறையில் என்ன நடந்தது ? ஸ்ரீதேவி இறந்து 3 மணி நேரம் ஆகியும்  போலீசுக்கு ஏன் சொல்லல? என சரமாரியாக கேள்விகள் கேட்டு போனி கபூரை துபாய் போலீசார் குடைந்தெடுத்த வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகை ஸ்ரீதேவி  தனது  கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தினருடன் துபாய் சென்று இருந்தார். திருமண விழாவில் ஸ்ரீதேவி உற்சாகத்துடன் கலந்து கொண்டார். கணவர் போனிகபூர், இளைய மகள் குஷிகபூர் இருவரும் அன்று மதியமே மும்பை திரும்பிவிட்டனர்.

ஸ்ரீதேவி மட்டும் துபாயில் தான் தங்கியிருந்த ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பினார். இந்த நிலையில் கணவர் போனி கபூர் அன்று மாலை மீண்டும் துபாய்க்கு வந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் விருந்துக்கு செல்ல தயாராயினர்.

அப்போது குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் நடிகை ஸ்ரீதேவி குளியல் அறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கியதால் சுவாசம் தடை பட்டு  உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஸ்ரீதேவி  மது அருந்தி இருந்ததற்கான சான்றுகள் அவரது ரத்த மாதிரிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. மேலும் அவரது மரணத்தில் குற்ற நோக்கம் எதுவும் இல்லை. எனவே இந்த மரணம் தண்ணீரில் மூழ்கியதால் நடந்த விபத்து என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்ரீதேவி இறந்து 3 மணி நேரம் கழித்துதான் போனி கபூர் போலீசுக்கு தகவல் கொடுத்தாகவும் ஒரு தகவல் வெளியாகியுருந்தது.

இதைத் தொடர்ந்து துபாய் போலீசார் போனி கபூரிடம் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர். அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போனி கபூரின் வாக்குமூலம் ஆகியவற்றை போலீசார் அரசு வழக்கறிஞரிடம் கொடுத்தனர்.

இவை இரண்டையும் பார்த்த அரசு வழக்கறிஞர், பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், போனி கபூரின் வாக்குமூலத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக  கருதுவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போனி கபூரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.