இன்று தமிழகமெங்கும் ரிலீஸாகியுள்ள தனது ‘ஆதித்ய வர்மா’படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றும் தியேட்டரில் போய் மக்களோடு மக்களாகப் பார்த்தால் உண்மையான நிலவரம் தெரியும் என்று தனது தந்தை விக்ரம் சொன்னதாகவும் நடிகர் துருவ் கூறியுள்ளார்.

'சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் உருவாகியுள்ளது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ள இந்தப் படம் இன்று தமிழகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் புரமோஷன் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த துருவ்,''நான் முன்பே சொன்னது போல நான் என் அப்பாவின் மிகப்பெரிய ரசிகன். எதிர்காலத்தில் அவருக்காக ஒரு கதை எழுதி அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன். இதுவரை யாரும் பார்க்காத ஒரு இமேஜை நான் அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது என்று எனக்குப் புரிகிறது. ஏனெனில் இங்கே நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

'ஆதித்ய வர்மா' படத்தின் இறுதிப் பிரதியை அப்பா என்னைப் பார்க்க விடவில்லை. தியேட்டரில் ரசிகர்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்று நான் தெரிந்துகொள்ள அவர் விரும்புகிறார். அந்த அனுபவத்தை நான் தவறவிடுவதை அவர் விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். இது அவரது மகனை ஆச்சர்யப்படுத்த அவரது யோசனை.என்னை சினிமாவுக்குள் கொண்டு வருவதற்காக அவர் 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கைத் தேர்ந்தெடுத்தார்.இந்தப் படத்துக்காக அப்பா தன்னுடை வேலைகளை தியாகம் செய்து, சில படங்களைத் தவிர்த்து அரும்பாடு பட்டார். ஆனால் வெறுமனே எனக்காக மட்டுமேமெனக்கெடாமல் மொத்தப்படத்துக்காகவும் அவர் நிறைய உழைத்தார்’என்றார் துருவ்.