பெரிய நட்சத்திரங்களுடன் மோதாமல் தனித்து வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல ரிலீஸ் தேதிகளைத் தவிர்த்து வந்த துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’படத்துக்கு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தின் மூலம் ஒரு சோதனை காத்திருக்கிறது.எனவே அப்படம் அடுத்த வாரம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திரையுலகில் வெற்றிகளை விட சோதனைகளையே அதிகம் கண்டு பழுத்த அனுபவம் பெற்றவரான விக்ரம் தனது மகன் துருவின் முதல் படம் பெரிய ஹீரோக்களின் படங்களுடன் மோதாமல் தனித்துதான் வரவேண்டும் என்பதில் நீண்டகாலமாக உறுதியாக இருக்கிறார். அப்படி முடிவெடுத்த தேதிதான் நவம்பர் 22. ஆனால் இன்று ரிலீஸாகியிருக்கவேண்டிய விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ ஃபைனான்ஸ் பிரச்சினைகளால் ரிலீஸாகவில்லை.

தயாரிப்பாளருக்கு ‘வீரம்’சமயத்தில் விநியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய பாக்கி, விஜய் சேதுபதிக்கு சென்று சேர வேண்டிய செட்டில்மெண்ட், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாக்கி என பலமுனை பிரச்சினைகளால் படம் சிக்கித் தவிக்க, கடந்த மூன்று நாட்களாக நடந்துவரும் பஞ்சாயத்து இன்று மதியம் வரை முடிவுக்கு வந்தபாடில்லை. துவக்கத்தில் இன்று மாலைக் காட்சிகளுக்கு ரிலீஸ் பண்ண எடுக்கப்பட்ட முயற்சிகள் தற்போது நாளை எப்படியாவது படத்தை ரிலீஸ் பண்ணிவிடவேண்டும் என்பதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதாம். ஆனால் நிலவரம் இந்த வார ரிலீஸுக்கு சாதகமாக இல்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அப்படி ஒருவேளை நடந்து சங்கத்தமிழன் ரிலீஸ் 22ம் தேதிக்கு மாற்றப்படுமானால் விஜய் சேதுபதி படத்துடன் மோத விக்ரம் விரும்பமாட்டார் என்றே தெரிகிறது.