பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து கன்னட திரைப்பட இயக்குநரான இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையின் முடிவில் தனக்கு தெரிந்த 15 கன்னட திரையுலகினரின் பெயர்களை போலீஸாரிடம் கூறி இருப்பதாகவும், சமூகத்துக்கு அழிவை ஏற்படுத்தும் போதைப் பொருளை பயன்படுத்தும் கன்னட திரையுலகினருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்திருந்தார். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் ஜெயநகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த, ரவிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். 

ரவிசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கன்னட நடிகை ராகினி திரிவேதியுடன் நெருக்கமாக தொடர்பில் இருப்பது தெரியவந்தது.  எனவே இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி ராகினிக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும், அதற்கான காரணம் குறித்தும் தனது வழக்கறிஞர் மூலம் விளக்கம் கொடுத்த ராகினி, திங்கள் கிழமை விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை கன்னட நடிகை ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பெண் போலீசார் உட்பட 7 பேர் கொண்ட குழு அதிரடி சோதனையில் இறங்கியது. இதையடுத்து நடிகை ராகினி திரிவேதியை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகை கைது செய்யப்பட்டிருப்பது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகினி  தமிழில் ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் படத்தில் ஹீரோயினாக நடித்தது குறிப்பிடத்தக்கது.