பெங்களூருவில் நடந்த ஒரு சின்ன சிக்னல் குழப்பத்துக்காக தன்னை துரத்தித் துரத்தி கெட்ட வார்த்தைகளில் திட்டிய உபெர் கார் டிரைவர் மீது போலீஸில் புகார் செய்துள்ளார் நடிகையும் பாடகியுமான வசுந்தரா தாஸ்.

கமலுடன் ‘ஹே ராம்’ அஜீத்துடன் ‘சிட்டிசன்’ படங்களில் நடித்தவரும், ஏராளமான பாடல்களை பாடியிருப்பவருமான வசுந்தரா தாஸ், திரையுலகை விட்டு ஒதுங்கி தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

நேற்று பெங்களூரு பாஷ்யம் சர்க்கிள் சிக்னல் ஒன்றில் வசுந்தராதாஸின் கார் நின்றுகொண்டிருந்தபோது, இடதுபுறம் செல்வதற்காக உபெர் கார் டிரைவர் ஒருவர் ஹார்ன் அடித்துக்கொண்டேயிருந்திருக்கிறார். ஆனால் ஸ்ட்ரெயிட்டாய் செல்ல வேண்டிய வசுந்தரா தாஸால் அவருக்கு வழிவிடமுடியவில்லை. இதையடுத்து சிக்னல் விழுந்ததும் வசுந்தரா வண்டியை நேராய் ஓட்டிச்செல்ல, கடுப்பான கார் டிரைவர், அவரை சுமார் 4 கி.மீ தூரம் வரை விரட்டிச்சென்று மல்லீஸ்வரம் பகுதியில் மடக்கி கெட்ட வார்த்தைகளால் திட்டித்தீர்த்திருக்கிறார். 

சற்று நேரத்தில் கூட்டம் கூடத் தொடங்கியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் கார் நம்பருடன் வசுந்தரா மல்லீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அந்த டிரைவரை போலீஸார் தேடிவருகின்றனர். நடிகையுடன் ஒரு சின்ன வாய்க்கா வரப்பு தகராறுக்காக அந்த டிரைவர் மீது இ.பி.கோ. 509,341,354,504 ஆகிய நான்கு செக்‌ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.