திரெளபதி பட இயக்குநர் மோகனின் ஆதரவாளர்கள் தன்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் பிரபல யூடியூப் சேனல் தொகுப்பாளர்.

திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் மீது பிரபல யூடியூப் சேனலின் தொகுப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். கலாட்டா யூடியூப் சேனலில், திரௌபதி திரைப்படத்தின் இயக்குநர் மோகன் ஜியிடம் நேர்காணல் எடுத்து அந்த வீடியோவை பகிர்ந்திருந்தனர். அந்த நேர்காணலை செய்தவர், தொகுப்பாளர் விக்ரமன. அதில், பாதியிலேயே நேர்காணலில் இருந்து மோகன் எழுந்து சென்றதாகக் காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கலாட்டா யூடியூப் சேனலில் தான் நேர்காணலை முடித்துக்கொண்டு திரும்பிய வீடியோவை ஒளிபரப்பாமல் பாதியிலேயே சென்ற வீடியோவை ஒளிபரப்பியதாக பதிவிட்டார் இயக்குநர் மோகன். அதன் பின்னர், இயக்குநர் மோகனின் ஆதரவாளர்கள் அலைபேசியில் அழைத்து தன்னை மிரட்டுவதாகவும் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளைப் பரப்புவதாகவும் தொகுப்பாளர் விக்ரமன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகாரளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“மோகனின் ஆதரவாளர்கள் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் தவறான தகவல்களை பரப்பி மிரட்டுகின்றனர். என் சாதி குறித்து கேள்வி எழுப்பி என்னை ஓர் அமைப்பின் பிரதிநிதியாக சித்தரிக்க முயல்கின்றனர்”என குற்றம்சாட்டியுள்ளார்.