ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. கூட்டு நிதி முறையில் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கினார் மோகன்.ஜி. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்திருந்தார். இந்த ஆண்டின் முதல் மாபெரும் வெற்றிப் படமாக 'திரெளபதி' அமைந்துள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் கதைக்களம் உருவாக்கிய சர்ச்சையின் மூலமே இது சாத்தியமாகியுள்ளது. 

தியேட்டர்களில் மட்டுமே 18 நாட்கள் ஓடியுள்ள இந்த படம், தமிழ்நாட்டில் மட்டும் அந்த படம் 14.28 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு 3 மடங்கு லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து மோகன் ஜியின் அடுத்த பட அறிவிப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ஹீரோ ரிச்சர்ட்டை வைத்து ஒட்டுமொத்த திரெளபதி டீமுடன் மீண்டும் களம் இறங்க உள்ளதாக அறிவித்தார். 

அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த மோகன் ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். “எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன்.. ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன்.. அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்...” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் திரெளபதி இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட ரசிகர்கள் இன்னும் சில காலம் கூட பொருத்திருக்கிறோம். ஆனால் திரெளபதியை விட தரமான கதையுடன் நல்ல அறிவிப்பை விரைவில் வெளியிடுங்கள் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.