நாம் தமிழர் கட்சியில் 20 பெண் வேட்பாளர்கள்  நிறுத்தப்பட்டது குறித்து கிண்டலாகப் பதிவிட்டதால் வெடித்த சர்ச்சையை அடுத்து, மனநல மருத்துவர் ஷாலினி விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. 20 தொகுதிகளில் கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை என்ற வகையில் நாம் தமிழர் கட்சி முன்னுதாரணத்துடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால் அதை வேறொரு பார்வையில் பார்த்த டாக்டர் ஷாலினி  ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்று  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.

அவரின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலர் ...’ஆண்களுக்கு இணையாக பெண்களை 40 தொகுதிகளிலும் களமிறக்கிய நாம் தமிழர் கட்சியின் பாலினச் சமத்துவத்தை பாராட்ட மனமில்லை. ஆனால், அவ்வாறு நிறுத்தப்பட்டிருக்கிற வேட்பாளர்களை எந்தளவுக்கு இழித்துரைக்க முடியுமோ அந்தளவுக்கு கொச்சைப்படுத்தியிருக்கிறார் மருத்துவர் ஷாலினி. படித்த பட்டதாரிகள், முனைவர்கள், வல்லுநர்கள், ஆளுமைகள் எனப் பலதரப்பட்ட எமது உடன்பிறந்தார்கள் 20 தொகுதிகளில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை இனிப்பான வார்த்தைகள் கொண்டு மயக்கினார்கள் என்பது எவ்வளவு அபத்தமானது? அறுவெறுப்பானது?

இதில் ஊடகத்தில் உட்கார்ந்துகொண்டு பெண்ணியம், வெங்காயம் என வாய்கிழியப் பேசுவது..? இவ்வளவு நாட்களாக ஷாலினியை ஒரு நல்ல மனநல மருத்துவர் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் ஒரு மனநோயாளி என்று இன்றுதான் தெரிந்திருக்கிறது. அவர் பார்வையில் இருக்கும் வக்கிரம், பாலியல் வன்கொடுமையாளனின் வக்கிரத்துக்குச் சற்றும் சளைத்ததல்ல.

பெண் ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்திப் பதிவிட்ட எஸ்.சேகருக்கும், எங்களது உடன்பிறந்தார்களை இழிவாகப் பதிவிட்ட மருத்துவர் ஷாலினிக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. எஸ்.வி.சேகரைக் கண்டித்துப் போராடிய பெண்ணிய அமைப்புகள், மருத்துவர் ஷாலினியின் இந்த அபத்தமானப் பார்வைக்கு வாய்மூடி மௌனமாக நிற்பீர்களென்றால் பெண்ணியம் என்று பேச உங்கள் எவருக்கும் அருகதை இல்லை’ என்று கடுமையாக விமர்சித்திருந்தனர்.

எதிர்ப்புகள் ஓவராக ஆனநிலையில்,  இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷாலினி, ''ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருக்கும்.  எடுத்துக்காட்டாக falling for என்றால் காதலிப்பது மட்டுமல்ல, ஒரு உத்தியையோ, ஜோக்கையோ உண்மை என்று நம்புவதும் அதில் சேர்த்திதான்.

உதாரணத்துக்கு: How could you fall for such an obvious trick?

ஆங்கில அகராதியைப் படிக்காமல்

1) 'ஷேம் ஆன் யூ ஷாலினி' என்று சொல்லுவதும்,

2) முதலில் நீங்கள் போய் பைத்தியத்துக்கு வைத்தியம் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதும்,

3) என் உதவியாளருக்கு போன் செய்து பிதற்றுவதும்

4) சம்பந்தமே இல்லாமல் யார் யாரையோ இதில் கோர்த்து விடுவதும்,  இப்படியான இன்ன பிற சதிகளும் உச்சகட்ட அறியாமை. அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்'' என்று சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.