இன்று அதிகாலை ஹைதராபாத்தில் நடந்த ஒரு கார் விபத்தில் நடிகர்,டாக்டர் ராஜசேகர் நூலிழையில் உயிர் தப்பினார். கார் தலை குப்புற கவிழ்ந்த அந்த விபத்தில் ராஜசேகருக்கு பலத்த காயங்கள் ஏற்படவில்லை என்றும் இந்த விபத்து செய்தி குறித்து தவறான தகவல்கள் பரப்பவேண்டாம் அவரது மனைவி ஜீவிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இரவு ஷூட்டிங்கை முடித்து விட்டு அதிகாலையில் நடிகர் ராஜசேகர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹைதராபாத் நகருக்கு வெளியே அவரது கார் பறந்துகொண்டிருந்தபோது திடீரென சாலையிலிருந்து விலகி தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த விபத்தை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் கார் கண்ணாடிகளை உடைத்து ராஜசேகரை மீட்டனர். உடனே வேறொரு காரில் அவர் வீடு திரும்பினார்.

இச்செய்தி மீடியாக்களுக்கு சென்றவுடன் ராஜசேகரின் விபத்து குறித்து கன்னாபின்னாவென்று செய்திகள் பரவின. அவர் படங்களில் மேக் அப் போட்டுக்கொண்டு காயமடைந்த புகைப்படங்கள் செய்திகளில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக வலைதளங்களில் பகிரப்பட்டது. இன்னும் சிலர் குடி போதையில் இருந்தாரா என்ற கேள்விகளையும் எழுப்பினர்.

உடனே அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்ட ஜீவிதா ராஜசேகர்,’அவர் பயணம் செய்த கார் டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. நடந்தது பெரிய விபத்து என்றாலும் சிறிய சிராய்ப்புகளுடன் என் கணவர் தப்பியிருக்கிறார். தற்போது அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த சிகிச்சை முடிந்தவுடன் போலீஸில் நடந்த விபத்து குறித்து விளக்கம் அளிப்பார். அவருக்காக பிரார்த்தித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி’என்று கூறியிருக்கிறார்.