நவம்பர் மாதம் என்றாலே நடிகர் கமல்ஹாசனுக்கு கொண்டாட்டம் தான் . 7 ஆம் தேதி கமலின் பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் அதை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதுவும் இந்த ஆண்டு கமல்ஹாசன் சினிமா உலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதால் அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. கடந்த 7 ஆம் தேதி கமல் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று தந்தை சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார்.பின்னர் ராஜ்கமல் அலுவலகத்தில் தனது குரு பாலச்சந்தரின் சிலையை கமலும், ரஜினியும் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் சென்னையில் நேற்று கமலின் 60 ஆண்டு சினிமா சேவைக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ரஜினி, பிரபு விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இப்படி அடுத்தடுத்து  செம குஷியில் இருக்கும் கமல்ஹாசனுக்கு அடுத்த கொண்டாட்டம்தான் ஒடிஷா செஞ்சுரியன் பல்கலைக் கழகம்  கமலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கிறார். இதையொட்டி ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நடிகர் கமல் சந்தித்துப் பேசினார். மேலும் அவரிடம் கமல் வாழ்த்துப் பெற்றார்.