முதல் சட்டபேரவைத் தேர்தலிலே 8.30 சதவீத வாக்கு, தனி ஆளாக விருதாச்சலம் வெற்றி, திமுக-அதிமுக வெற்றிகளைப் பாதித்தது, பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தது என விஜயகாந்தின் அரசியல் கதைகள் எல்லாம் இன்று பழங்கதைகளாகிவிட்டன. 

விஜயகாந்தின் உடல் நிலை பாதிப்பு தேமுதிகவை ஆட்டம் காண வைத்துவிட்டது. உடல்நிலை பாதிப்பால் விஜயகாந்தை அக்கட்சித் தொண்டர்கள் அணுக முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தேமுதிகவை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அது அக்கட்சியினரை பெரிதாக ஈர்க்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அரசியலில் காலடி எடுத்துவைப்பதையும் தொண்டர்கள் யாரும் அலட்டிக்கொள்ளவும் இல்லை.

 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள்வரை அதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் தேமுதிகவின் கூட்டணி வரவுக்காகவும் விஜயகாந்தின் அணுகுமுறையைக் கவனிக்கவும் திமுக-அதிமுக ஆகிய பெரிய கட்சிகளே காந்திருந்த காலம் உண்டு. இன்றோ நாடளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் நிலை என்ன என்பதை அறியகூட எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை.

இதுபோன்ற ஒரு நிலையில் தேமுதிக தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகியே நிற்கிறார்கள். தற்போதைய நிலையில், தேமுதிக தலைமை எந்த முடிவை எடுத்தாலும், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு நிர்வாகிகள் யாரும் தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. இதுபற்றி அந்தக் கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் ஒருவர் கூறும்போது, “தேமுதிக தொடங்கியபோது கட்சியில் இருந்த செயலாளர்களில் 75 சதவீதம் பேர் இன்று கட்சியிலேயே இல்லை. இதேபோல  தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 80 சதவீதம் பேர் கட்சியிலிருந்து விலகிவிட்டார்கள் அல்லது கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கி நிற்கிறார்கள்” என்கிறார் அவர்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் கூட்டணிக்காக திமுக கடைசிவரை காத்திருந்தது. ஆனால், பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்த முடிவின்படி மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தார். கட்சியின் எல்லா முடிவுகளிலும் குடும்பத்தினரின் ஆதிக்கம் நிறைந்திருப்பதும் தேமுதிக தொண்டர்கள் விலகி செல்லும் முடிவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அந்தக் கட்சியின் தொண்டர்கள். 

 “2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கே விஜயகாந்த் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். யாருடைய பொருளாதார நிலையைப் பற்றியும் கவலைப்படாமல் வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கே குடும்பத்தினரின் தலையீடால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. விஜயகாந்தின் பழைய ரசிகர்கள் அவரிடமிருந்து விலகி செல்ல இதுவே முக்கிய காரணம். 

தற்போது விஜயகாந்தை ஒருவரும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எல்லா முடிவுகளும் குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே எடுக்கப்படுகிறது” என்று விரக்தியுடன் கூறுகிறார் தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர்.
தேமுதிக கட்சியின் ஒரே முகமாக விஜயகாந்துதான் விளங்கிவந்தார். தற்போதைய நிலையில் விஜயகாந்த் உடல்நிலை தேறிவந்தால் மட்டுமே கட்சியும் முன்னேற்றம் காண முடியும் என்பதே யதார்த்த நிலை. விஜயகாந்துக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லாத நிலை ஏற்படுமானால், அந்தக் கட்சி மீண்டு வருவது கடினமாகிவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.