நடிகர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தை பொது நிகழ்வுகளில் பார்க்கமுடியவில்லையே அவரது குரலை கேட்க முடியவில்லையே என அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் இருக்கிறார். பொது நிகழ்வில் கலந்துகொள்வதோ, பேசுவதோ இல்லை. கட்சி அலுவலகத்துக்கு மட்டும் எப்போதாவது அழைத்து வரப்படுகிறார்.
விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதனுக்காக கட்சியில் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் வேறு வழியில்லாமல் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வந்தனர். தேமுதிக கட்சியின் நிலையும் சரிந்து கொண்டே போகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. திமுகவுக்கு அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வந்த தேமுதிக 35 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

35 வேட்பாளர்களும் தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் தற்போதைய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருப்பது வேதனையளிப்பதாக கூறுகின்றனர் தேமுதிக தொண்டர்கள். கட்சி தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் அதிர்ச்சி கொடுத்து உள்ளது. புகைப்படத்தை பகிரும் ரசிகர்கள் பலரும் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
