பிரபல நடிகர், சத்யராஜின் மகளும்,  ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, தொடர்ந்து, குழந்தைகள் நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

குறிப்பாக சமூக வலைத்தளங்களில், தங்களுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை கூறி விட்டு, தங்களுடைய வேலைகளை பார்க்க செல்பவர்கள் மத்தியில், ஊட்ட சத்து குறித்து பல்வேறு இடங்களுக்கு நேரடியாக தன்னுடைய குழுவினருடன் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் திவ்யா. மேலும், குழந்தைகள் நலன் கருதியும், மருத்துவம் சரியான முறையில் மக்களை சென்றடைய வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு விரைவில், அரசியலை கையில் எடுக்க உள்ளதாகவும் அறிவித்து அதிரவைத்துள்ளார்.

திவ்யா, அரசியலை கையில் எடுப்பதற்கு முன்பாகவே... உலகின் மிகப்பெரிய மதிய உணவு திட்டமான, அக்ஷய பாத்ராவின் விளம்பர தூதராக இருந்து வருகிறார்.  அதே போல் 'வேர்ல்ட் விஷன்' அமைப்புடன் இணைந்து கிராமப்புற பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கும் முயற்சிகள் தொடங்கியிருக்கிறார். 

மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும்  குரல் கொடுக்கும் விதமாக திவ்யா, பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது எல்லோரும் அறிந்ததே. மருத்துவர்களும் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துபவர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டு வரும் திவ்யா, ஏசியா நெட் தளத்திற்கு கொடுத்த சிறப்பு குழந்தைகள் தின Exclusive பேட்டி இதோ...

நேரடி களத்தில் திவ்யா:

ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆக, தமிழ்நாட்டில் குறைந்த வருமானத்தில், வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எனக்கு நானே வாய்ப்புகள் அமைக்க முடிவு செய்தேன்.  அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் என் ஆராச்சியை துவங்கினேன்.

அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தல்:

நான் பார்த்தவரை, கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஐந்து பெண்களில் இரண்டு பெண்களுக்கு உள்ளது. 

மருத்துவமையில் உள்ள, ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அங்குள்ள அறைகளை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். மருத்துவமனையை தேடி வரும் நோயாளிகளுக்கு, சாதாரண மனிதர்களுக்கு இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை விட எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.  இவற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் நோய் பரவாமல் தடுக்க முடியும்.

அதே போல், அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகள் பயன்படுத்தும் தலையணைகள் மற்றும் போர்வைகள் போதுமான அளவு இல்லை. மழைக்காலத்தில் வரும் நோய்களை தடுக்க போதுமான ஊசிகள் இருக்க வேண்டும்.  

உடனடியாக தூக்கி எறியவேண்டும்:

இது மிகவும் முக்கியமான ஒன்று, மருந்து கடைகளில் உள்ள காலாவதியான மருந்துகளை உடனடியாக டிஸ்போஸ் செய்ய வேண்டும். காலாவதியான மருந்துகளை உபயோகப்படுத்தினால் பல உடல் உபாதைகள் வரும். 

குறிப்பாக, மக்கள் அனைவரும் அவர்கள், வீட்டிற்கு வாங்கும் பொருட்கள் முதல்,  குழந்தைகளுக்கும் வாங்கும் அனைத்து பொருட்களும் (பால் பவுடர், ஷாம்பு, மருந்துகள்) போன்றவை, காலாவதியாகும் தேதியை, பார்த்து வாங்குவது அவசியம்.  

மருந்து கடைகள் வைத்திருப்பவர்களுக்கு திவ்யாவின் வேண்டுகோள்:

மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசில் தான், மருந்துகளை வாங்குகிறார்கள்.  மருந்து விலை குறையவில்லை. ஏறி கொண்டுதான் போகிறது. தயவு செய்து உங்கள் கடைகளில் விற்பனை ஆகாத, காலாவதியான மருந்துகளை கவனமாக பார்த்து அப்புறப்படுத்திவிடுங்கள்.

அரசியல் முடிவு:

அரசியலை கையில் எடுக்க போகிறேன் என்பதை மட்டுமே அறிவித்துள்ளேன். காரணம் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது இவை  இரண்டு. ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றொன்று  ஒரு மனிதன் வாழ்வாதாரத்திற்கு தேவையான பணம்.  உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவன் கடினமாக உழைக்க முடியும். கடினமாக உழைத்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும்.  ஆரோக்கியமான வாழ்வு வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது.

மருத்துவமனைக்கு சென்றால் நோய்குணமாகும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை. மருத்துவமனைக்குச் செல்வதற்கு பயப்படுகிறார்கள். எனவே நம் சுகாதார அமைப்பு, தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். 

குழந்தைகளை பொறுத்தவரையில், ஐந்து வயதிற்குள் இருக்கும் குழந்தைகளின் 39.4 சதவீத குழந்தைகளுக்கு, போதுமான வளர்ச்சி இல்லை.  12 மாதத்தில் இருந்து 23 மாதம் உள்ள குழந்தைகளில்,  62 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

திவ்யா சத்யராஜ் நடத்தும் ஸ்போட்ஸ் கேம்ப்:

இப்போது உள்ள குழந்தைகளுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று, என்பதால். அடிக்கடி இதுபோன்ற ஸ்போட்ஸ் கேம்ப் நடத்தப்படுகிறது.  மொபைல், ஐபாட், வந்ததிலிருந்து குழந்தைகள் அவற்றில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை விளையாட சொல்லி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். விளையாடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும், ஒழுக்கத்தை கற்று கொள்வார்கள். அவர்களின் எலும்புகள் வலுப்பெறும், முக்கியமாக வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ளக்கூடிய மன பக்குவம் அவர்களுக்கு வரும். 

பெற்றோர் கவனத்திற்கு:

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு சாப்பிடக் கொடுங்கள்.  பர்கர், பீட்சா, போன்றவற்றை குழந்தைகள் வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது தவறு அல்ல, அடிக்கடி சாப்பிடுவது தான் தவறு. 

மேலும், தனியார் பள்ளிகளில் உள்ள கேட்டரிங்களில், சமோசா, பப்ஸ்  போன்ற சிற்றுண்டிகளை குறைத்து அதற்குப்பதில் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை அவர்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். 

குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடு:

அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 33  சதவீத ஆண் குழந்தைகளுக்கும், 40 சதவீத பெண் குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது என, இதற்கு முக்கிய காரணம் அவர்கள் காலை நேரத்தில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வருவதே.  இதனை தடுக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்கள் தங்கிப் படிக்கும் அரசு பள்ளியில் தினமும் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்த வேண்டும்.

தண்ணீர் குடிக்க மணி:

பல மாணவர்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பதில்லை. இதனை சரி செய்வதற்காக, திருச்சி அருகே உள்ள, கருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும், என மணி அடித்து தண்ணீர் குடிக்க வைக்கிறார்கள். இதே போன்று மற்ற பள்ளிகளும் தானாக முன்வந்து இது போன்ற செயல்களை நடைமுறை படுத்த வேண்டும்.

இப்படி குழந்தைகள் மற்றும் மக்களின் ஆரோக்கியம் குறித்து, அரசியலுக்கு வரும் முன்னரே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் திவ்யாவின் முயற்சிகளை, ஏற்கனவே பலர் பாராட்டி வரும் நிலையில். இவரின் அடுத்த கட்ட முயற்சிகளுக்கும் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்றே நம்பலாம்.