நடிகை சாய் பல்லவியுடன் இணைத்துக் கிசுகிசுக்கட்ட அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர் ஏ.எல்.விஜய் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டரை இன்னும் இரு வாரங்களில் மணக்கவிருக்கிறார். இத்தகவலை விஜயின் பெற்றோர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

மிகக் குறைவான வெற்றிப்படங்களே கொடுத்திருந்தாலும் காரணமே தெரியாமல் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். அஜித்தின் ‘கிரீடம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விஜய், நடிகர் விஜயை வைத்து ‘தலைவா’, விக்ரமை வைத்து ‘தெய்வ திருமகள்’, ‘தாண்டவம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.’பொய் சொல்லப்போறோம்’,’சைவம்’, ‘தேவி’,’தேவி2’,’கரு’ போன்ற படங்கலையும் இயக்கியிருக்கிறார்.

 ’தெய்வத்திருமகள்’படப்பிடிப்பிடிப்பின்போது  நடிகை அமலா பாலை காதலித்த விஜய், கடந்த 2014ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை அமலா நிறுத்திக் கொண்ட நிலையில் திடீரென்று இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமான மூன்று ஆண்டுகளிலேயே, அதாவது 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்கள்.விவாகரத்துக்குப் பிறகு நடிகை அமலா பால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், இயக்குநர் விஜயுடம் தொடர்ந்து பல படங்களை இயக்கி வரும் நிலையில், அவர் இயக்கிய ‘கரு’ படத்தில் நடித்த சாய் பல்லவியுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.மேலும், இயக்குநர் விஜய் சாய் பல்லவியை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாக, இரண்டாவது திருமணம் குறித்து இயக்குநர் விஜய் மறுப்பு தெரிவித்தார்.

 இந்த நிலையில், இயக்குநர் விஜய் தற்போது இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள  தனது பெற்றோர்களுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் மணக்க இருக்கும் பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா. சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகளான இவர், எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர். பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இயக்குநர் விஜய் - டாக்டர் ஐஸ்வர்யா திருமணம் வரும் ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இத்திருமணத்துக்கு நடிகை அமலா பாலுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.