‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பியே நண்பியே’என்று நயன்தாராவுடன் கைகோர்த்த நாளை மறைமுகமாகக் குறிப்பிட்டு ட்விட் செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். ‘நானும் ரவுடிதான்’படத்தின் 4ம் ஆண்டு நினைவுநாள் என்று அவர் குறிப்பிட்டிருந்தாலும் அப்படத்திலிருந்தே இருவரும் காதலிக்கத்துவங்கியதால் அது நயன்தாராவுடனான நான்கு ஆண்டுகள் என்றே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

2012ம் ஆண்டு சிம்புவை வைத்து ‘போடா போடி’ என்ற அட்டர்ஃப்ளாப் படம் கொடுத்த விக்னேஷ் சிவன் அடுத்த மூன்று ஆண்டுகள் படம் இன்றி சும்மா சுற்றி வந்தார். அந்நிலையில் சிம்பு மூலம் கிடைத்த அறிமுகத்தால் நயன்தாராவைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு ஒரு கட்டத்தில் அவரது கடைக்கண் பார்வை அருள் கிடைக்கவே ‘நானும் ரவுடிதான்’படம் கிடைத்தது. அப்படம் ஹிட்டடிக்கவே அவரும் நயனும் மிகவும் நெருக்கமானார்கள். அந்த 4 வருடங்களுக்கு முன்பு துவங்கிய அந்தக் காதல் இன்று கிளைவிட்டுப் பூத்து குலுங்கி நிற்கிறது.

அதன் பொருட்டு அப்படம் தொடர்பான அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் விக்னேஷ் சிவன் அப்பதிவில், தனக்கு வாய்ப்புக் கொடுத்த லைகா புரடக்‌ஷன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு நயன்தாராவை மட்டும் செல்லமாக ‘என் தங்கமே’என்று குறிப்பிட்டுள்ளார். அப்பதிவுக்கு கீழே ‘ வழி விட்டு இந்த இடத்துக்கு வர்றதுக்கு காரணமா இருந்த சிம்புவை மறக்கலாமா என்று அங்கலாய்த்து வருகிறார்கள்.