காதலி நயன்தாராவின் 35 வது பிறந்தநாளை நியூயார்க் இரவில் வைத்துக்கொண்டாடியுள்ள விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மானே தேனே பொன்மானேவுக்காக அடுத்த ஒரு நடிகையாக நீ இன்னும் மேலும் மேலும் சாதிக்கவேண்டும் என்று வாழ்த்தியுள்ளதால் அவர்கள் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள் என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த வருடம் போலவே இந்த ஆண்டும் ஒரு வாரத்துக்கு முன்பாகவே நியூயார்க் பறந்த நயன் ,விக்னேஷ் சிவன் இளஞ்ஜோடிகள் நேற்று இரவு நடந்த பிறந்தநாள் விழாக் கொண்டாட்ட புகைப்படங்களை தங்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டனர். அதில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ஒரு பதிவில்,...என் காதல் வாழ்க்கையே, நேர்மையானவளே, தூய்மையானவளே, துணிச்சலானவளே என்று தொடங்கி ’மானே தேனே பொன்மானே’ எல்லாம் போட்டு இறுதியில் நீ வாழ்க்கையில் உனது நடிப்புத் துறையிலும் மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

ஏற்கனவே இவர்களது சொந்தத் தயாரிப்பில் வளர்ந்து வரும் ‘நெற்றிக்கண்’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘மூக்குத்தி அம்மன்’படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நயன், நியூயார்க்கில் வைத்து அஜீத் பட தயாரிப்பாளரை சந்தித்ததால் அவர் ‘வலிமை’படத்திலும் நடிக்கக்கூடும் என்று செய்திகள் வருவதால், அவர்களது திருமண தேதி, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தள்ளிப்போடப்பட்ட தமிழக உள்ளாட்சித் தேர்தலின் கதிக்கு ஆளாகியிருக்கிறது. தற்போது அந்த உள்ளாட்சித் தேர்தலுக்கே ஒரு தேதி குறிப்பிடப்பட உள்ள நிலையில் இவர்கள் திருமண விவகாரம் மட்டும் நீண்டுகொண்டே போகிறது.